ராமநாதபுரம், சிவகங்கையில் துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு

ராமநாதபுரம் நகரின் முக்கிய வீதிகளில் திங்கள்கிழமை துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு நடத்தினர்.

ராமநாதபுரம் நகரின் முக்கிய வீதிகளில் திங்கள்கிழமை துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு நடத்தினர்.
நாடெங்கும் மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்18) நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 1916 வாக்குச் சாவடிகளில் மக்கள் வாக்களிக்க உள்ளனர். அதில் 188 வாக்குச்சாவடிகள் பதற்றமாவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வாக்குச் சாவடிகளில் 14,762 பேர் வாக்களிக்கவுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிக்காக ராமநாதபுரத்துக்கு 3 பிரிவு துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு பிரிவுக்கு 80  வீரர்கள் வீதம் 240 பேர் வந்துள்ளனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. அரண்மனை தெருவிலிருந்து புறப்பட்டு சந்தைத் தெரு, ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவனை வழியாகப் புதிய பேருந்து நிலையம் வரை அவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.  இந்த அணிவகுப்பை மாவட்ட ஆட்சியரும், தொகுதி தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் தொடக்கிவைத்து ராணுவத்தினருடன் நடந்து சென்றார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உள்ளிட்டோரும் நடந்து சென்றனர். 
துணை ராணுவப் படையினருடன் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 150 பேரும், மாவட்ட காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.  வாக்களிப்பின் போது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணிவகுப்பு நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
பரமக்குடி: பரமக்குடியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவம் மற்றும் போலீஸாரின் அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சங்கர் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. 
அங்கிருந்து எமனேசுவரம் முக்கிய வீதிகளின் வழியே சென்று வைகை நகர், தர்மராஜபுரம், ஆற்றுப்பாலம், ஓட்டப்பாலம் வரை அணி வகுத்து வந்தனர். இந்த அணிவகுப்பில் துணை ராணுவத்தினர், காவல்துறையினர், போக்குவரத்து போலீஸார் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை: சிவகங்கை மக்களவைத்தொகுதி தேர்தல் மற்றும் மானாமதுரை(தனி) தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கையில் காவல் துறை சார்பில் கொடி அணி வகுப்பு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.சிவகங்கை அரண்மனை வாசல் முன் தொடங்கிய அணி வகுப்பை சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். 
அப்போது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் உடனிருந்தார். அரண்மனை வாசல் முன் தொடங்கிய கொடி அணி வகுப்பு நேரு கடை வீதி,நெல் மண்டி தெரு,மதுரை விலக்கு சாலை, திருப்பத்தூர் சாலை, ராமச்சந்திரனார் நினைவு பூங்கா, மஜீத் சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் அரண்மனை வாசலில் நிறைவு பெற்றது.
தேவகோட்டையில்: தேவகோட்டையில் திங்கள்கிழமை காவலர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிக்கும் வகையில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில்  தேவகோட்டை ஒத்தக்கடையில் தொடங்கி, பெரிய பள்ளிவாசல்,சிவன்கோயில், தபால் நிலையம், பேருந்து நிலையம், தியாகிகள் பூங்கா, திருப்பத்தூர் சாலை வழியாக  ராம்நகர் பேருந்து நிலையம், ஆனந்தா கல்லூரி வரை அணிவகுப்பு நடைபெற்றது. 
இதில் ஏ.எஸ்.பி.  ஆர்.கிருஷ்ணராஜ்  தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் உள்பட 180 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com