ஏர்வாடி அருகே பேரிடர் கால மீட்பு ஒத்திகைப் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே பேரிடர் கால மீட்பு ஒத்திகைப் பயிற்சி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே பேரிடர் கால மீட்பு ஒத்திகைப் பயிற்சி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புயல், வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் அரசின் அனைத்துத் துறைகளும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த மாதிரி ஒத்திகையானது தமிழக கடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, தொண்டி மற்றும் ஏர்வாடி கல்பார் ஆகிய இடங்களில்
இந்த ஒத்திகை நடைபெற்றன. கீழக்கரை அருகே ஏர்வாடி ஊராட்சி கல்பாரில் உள்ள புயல் காப்பகக்  கட்டடத்தில் தீயணைப்புத் துறையினர், 
கடலோரக் காவல் படையினர், வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், மீன் வளர்ச்சித் துறையினர் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினர், மருத்துவக் குழுவினர் என அனைத்துத் துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். 
 கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர்பபிதா முன்னிலையில், பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதும், மூன்று பேருந்துகளில் அதிகாரிகள் ஆதஞ்சேரி, கல்பார், மெய்யன்வலசை ஆகிய  கிராமங்களுக்குச் சென்று அங்கிருந்த மக்களை பேரிடர் ஒத்திகை நடைபெறுவதாகக் கூறி வாகனங்களில் அழைத்து வந்தனர்.
பின்னர் கல்பார் புயல் காப்பகத்தில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 
அதனடிப்படையில்  தீயணைப்புப் படையினர் விரைந்து மீட்பது போலவும், கட்டடங்களின் மேற்பகுதியிலிருந்து ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பது போலவும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
 காப்பகத்தில் கடலில் சிக்கியவர்களை மீட்கும் பைபர் படகு உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இதில் கீழக்கரை சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட மீன்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பி. ஜெய்சங்கர், ஆய்வாளர் பி. கோமதியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாடானை: திருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரிடர் கால மீட்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. இதில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை புயல் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செயல்படுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ், திருவாடானை வட்டாட்சியர் சேகர், காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com