சமையல் போட்டி: அடுப்பில்லாமல் உணவு சமைத்த சமையலர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் இட்லி, அவல் சோறு போன்ற

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் இட்லி, அவல் சோறு போன்ற 18 வகை உணவுகளை அடுப்பின்றி சமைத்த சத்துணவுத்துறை பெண் சமையலர்களை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பாராட்டினார். 
ராமநாதபுரம் நகரில் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் சத்துணவு மைய சமையலர், உதவியாளர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது. இதில் 11 ஊராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்களது சமையல் திறனை வெளிப்படுத்தும் வகையில் இயற்கை உணவுகளை சமைத்து பார்வைக்கு வைத்திருந்தனர். எண்ணெய் இல்லாத உணவு, அடுப்பங்கரை இல்லாத உணவு, ஆரோக்கிய இயற்கை உணவு, குழந்தைகள் வளர்ச்சிக்கான உணவு உள்பட 7 வகை உணவுகள் போட்டிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தன. ராமநாதபுரம் வைரவன்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமையலர் வஜிதாபானு சார்பில் அடுப்பில்லாமலே இயற்கை சாம்பார், புடலங்காய், பீர்க்கங்காய் கூட்டு, அவல் சோறு, ரசம், கேழ்வரகு பாயசம், கேரட், அவல் சேர்த்து இட்லி, சப்பாத்தி, பூ சாறு, பீர்க்கங்காய், பசும்பொன் அவல் சோறு ஆகியவற்றை தயாரித்து  பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்வையிட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பாராட்டினார்.
மேலும் இந்த போட்டியில் போகலூர் பகுதியிலிருந்து பனை மரங்களைச் சார்ந்தே பல வகை உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. திருப்புல்லாணி பகுதியில் குதிரைவாலி இட்லியும், மண்டபம் பகுதியில் பாசிப்பயறு சாதம், ஆவாரம்பூ கூட்டு, ராமநாதபுரம் நகராட்சி பள்ளி சமையலர் சார்பில் கேழ்வரகு குளோப் ஜாமூன் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. நவதானிய உணவுகள் மற்றும்  தாவர உணவுகள் போட்டிகளில் அதிகம் இடம் பெற்றிருந்தன. 
போட்டிகளில் இருந்த உணவு வகைகளைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சிய,ர் ஒவ்வொரு உணவையும் சுவைத்துப் பார்த்து பாராட்டினார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே இப்போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் அமைப்பாளர், உதவியாளர் என 3 பேர் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.5 ஆயிரம் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் என்றார்.
போட்டி நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெயந்தி, உணவுப் பாதுகாப்பு அலுவலர் கே.சிவராமபாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு திட்ட அலுவலர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com