உப்பூர் அனல்மின் நிலைய கடல் பாலத்துக்கு எதிர்ப்பு: கிராம சபை கூட்டத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்

உப்பூர் அனல் மின் நிலையத்துக்காக கடலில் பாலம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதி மீனவர்கள் வியாழக்கிழமை கிராமசபைக் கூட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்பூர் அனல் மின் நிலையத்துக்காக கடலில் பாலம் அமைப்பதை எதிர்த்து அப்பகுதி மீனவர்கள் வியாழக்கிழமை கிராமசபைக் கூட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. 
 இதில் ஒரு பகுதியாக தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் கடலில் விடுவதற்காக சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடலில் பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலம் அமையும் கடல் பகுதியில் கடலூர் ஊராட்சிக்கு உள்பட்ட உப்பூர், மோர்ப்பண்ணை, சத்திரம், கூத்தமயில் ஆகிய கிராம மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர். பாலம் அமைப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி பாலம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு அளித்தும் பலனில்லை. 
 இந் நிலையில், வியாழக்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு உப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கிராம சபைக் கூட்டத்துக்கு நூற்றுக்கணக்கான மீனவர்களும், பெண்களும் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் அனல்மின் நிலைய பாலப்பணியை நிறுத்துவதற்கு கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 இத் தகவலறிந்து ஊராட்சி உதவி இயக்குநர் கேசவதாஸ் வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த துரை. பாலன், கிராமத் தலைவர் கே.கோவிந்தன் ஆகியோர் அனல்மின் நிலையப் பாலம் அமைப்பதால் நாட்டுப்படகு மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பதை விளக்கினர். மேலும் கிராம சபை கூட்டத்தில் பாலம் அமைப்பதை தடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அத்துடன், பாலம் அமைக்கும் பணியை தாற்காலிகமாக நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறினர். 
 அவர்களிடம் செல்லிடப்பேசி மூலம் ஆட்சியர் கொ.வீரராகவராவ் பேசினார். அவர்களது கோரிக்கை குறித்து பேசி முடிவெடுக்கலாம் என்று கூறி ஆட்சியர் சமரசம் செய்தார். அதனடிப்படையில் கிராம சபைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, போராட்டத்தைக் கைவிட்டு மீனவர்கள் கலைந்துசென்றனர். கடல் பாலப் பணிகளை எதிர்த்து அப்பகுதியில் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com