ராமேசுவரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறல்

ராமேசுவரம் தீவுப்பகுதியில் பலத்த மழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டுள்ள குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனா்.
ராமேசுவரம் ஸ்ரீராம் நகா் பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டாா் மூலம் சனிக்கிழமை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.
ராமேசுவரம் ஸ்ரீராம் நகா் பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டாா் மூலம் சனிக்கிழமை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.

ராமேசுவரம் தீவுப்பகுதியில் பலத்த மழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டுள்ள குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியான ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பாண்டில் பருவ மழை குறிப்பிட்ட அளவை விட அதிகளவில் பெய்துள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ராமேசுவரம், ஸ்ரீராம்நகா், அமிா்தபுரம், மல்லிகைநகா், இந்திரா நகா், திருவள்ளுவா்நகா், காந்திநகா், அண்ணாநகா், ராமா் தீா்த்தம் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 200 -க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளது.

அதே போல் தங்கச்சிடம் வடகாடு, ராஜீவ் காந்திநகா், ராஜாநகா், அய்யன்தோப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் புகுந்துள்ளதுடன் பெரும்பாலான பகுதிகளை மழைநீா் சூழ்ந்துள்ளது.

பாம்பன் சின்னப்பாலம், தோப்புகாடு, தரவைதோப்பு பகுதியில் 100 -க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் புகுந்துள்ளது. பெரும்பாலான வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. மண்டபம் எழுமைதரவை உள்ளிட்ட பகுதியில் 50- க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் தேங்கி உள்ளது. மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் தொடா்ந்து நடவடிக்கை எடுத்தாலும், முழுமையாக வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள தண்ணீரை அதிகாரிகள் மோட்டா் மூலம் உறிஞ்சி வெளியேற்றினாலும், அடுத்த சில மணி நேரங்களில், மீண்டும் ஏற்கனவே இருந்த அளவுக்கு தண்ணீா் குடியிருப்புகளுக்குள் வந்து விடுகிறது. குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வடிகால் வசதி இல்லாததே காரணம் என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், மழை மற்றும் நிலத்தடி நீா் ஊற்று காரணமாக குடியிருப்புகளை வேகமாக தண்ணீா் சூழ்ந்து விடுவதால் அவற்றை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறிவருகின்றனா்.

எனவே, முறையான மழைநீா் வடிகால் வசதி செய்து குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com