மக்கள் சேவையே உண்மையான வழிபாடு: சுவாமி தன்மயானந்தர்

மக்கள் சேவையே உண்மையான வழிபாடாகும் என ஹரித்துவார் ராமகிருஷ்ண மிஷன் மூத்த துறவி சுவாமி தன்மயானந்தர் கூறினார்.

மக்கள் சேவையே உண்மையான வழிபாடாகும் என ஹரித்துவார் ராமகிருஷ்ண மிஷன் மூத்த துறவி சுவாமி தன்மயானந்தர் கூறினார்.
ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்துக்கான புதிய வளாகம் உச்சிப்புளி நாகாச்சியில் கட்டப்பட்டுள்ளது. அதில் 15 கிலோ வாட் அளவிலான மின் சக்திக்கான சூரிய ஒளித் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த வசதியை செவ்வாய்க்கிழமை சுவாமி தன்மயானந்தர் தொடக்கி வைத்து பேசியது: சுவாமி விவேகானந்தர் மக்கள் சேவையே உண்மையான கடவுள் வழிபாட்டுச் சேவை என வலியுறுத்தியுள்ளார். 
அதனடிப்படையில் அனைவரும் மக்கள் சேவையை முதன்மையான வழிபாடாகக் கருதி செயல்படவேண்டும். நமது பாரம்பரியத்தில் கோயிலுக்குச் சென்று வழிபடுவது அவசியமான ஒன்றாகும். 
அதைத் தொடர்ந்து சமூகத்தில் மக்கள் சேவையை ஆற்றுவதும் நமது கடமையாகும். ஆன்மிக தலங்களுக்கு செல்வதோடு நமது பக்தி நிறைவடைந்தது என நின்றுவிடாமல் மக்கள் சேவை செய்வதையும் தொடரவேண்டும். 
ஏழை, எளிய மக்களுக்கான சேவைதான் இறைவனுக்கு நாம் படைக்கும் மிகச்சிறந்த வழிபாடாக அமையும் என்றார். 
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் வரவேற்றார். கரூர் வைஸ்யா வங்கியின் மதுரை மண்டல மேலாளர் பி.ரவி மற்றும் அவ்வங்கியின் ராமநாதபுரம் கிளை மேலாளர் ஹரிகரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நாகாச்சி கிராமப் பிரமுகர் ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
முன்னதாக சுவாமி தன்மயானந்தருக்கு ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com