"பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம்': ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 165 விவசாயிகளுக்கு ரூ.2000 வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டத்தில், பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில்  முதல் கட்டமாக

ராமநாதபுரம் மாவட்டத்தில், பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில்  முதல் கட்டமாக 165 விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்துக்கான ஆணை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வக்புவாரிய தலைவரும், ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யுமான அ.அன்வர்ராஜா முன்னிலை வகித்தார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசியதாவது: 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திடும் வகையில், பிரதம மந்திரியின் கிசான் சம்மான்  திட்டத்தின் கீழ் உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை உதவித்தொகை வழங்குவதற்கு அடையாளமாக 165 விவசாயிகளுக்கு இந்த ஆணை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை 3 தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 75,534 சிறு, குறு விவசாயிகளின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 
மேலும், இப்பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ள விவசாயிகளை சேர்க்கும் வகையில் வரும் பிப்ரவரி 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாள்களில் சிறப்பு முகாம்கள் அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தகுதியான விவசாயிகள் தங்களது பெயர், வயது, பாலினம், ஆதார் எண், வங்கி கணக்கு எண், மின்னணு குடும்ப அட்டை எண், செல்லிடப்பேசி எண் மற்றும் விவசாய நிலத்தின் பட்டா, சிட்டா நகல் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள், பரமக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) எல்.சொர்ணமாணிக்கம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சி.பன்னீர்செல்வம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.எஸ்.ஷேக்அப்துல்லா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெ.கிஷோர்குமார், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மரு.எஸ்.கவிதா உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com