இலங்கை கடற்படை விரட்டியபோது கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் உடல் தகனம்

இலங்கை கடற்படை விரட்டியபோது, கடலில் விழுந்து உயிரிழந்த ராமநாதபுரம் மீனவர் உடல் அவரது சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இலங்கை கடற்படை விரட்டியபோது, கடலில் விழுந்து உயிரிழந்த ராமநாதபுரம் மீனவர் உடல் அவரது சொந்த ஊரில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
 ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைக்கூட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் க.முனியசாமி. மீனவரான இவர் மற்றும் செல்வம், கார்மேகம், முத்துமாரி ஆகியோர் கடந்த 13 ஆம் தேதி நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களது படகில் மோதி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், தப்பிக்க முயன்றபோது படகு கவிழ்ந்து முனியசாமி உள்ளிட்ட 4 பேரும் கடலில் மூழ்கினர். இதனை அறிந்த சக மீனவர்கள் அவர்களில் 3 பேரை மீட்டனர். முனியசாமியை மட்டும் மீட்க முடியவில்லை. இந்நிலையில், அவரது சடலம் நெடுந்தீவு பகுதியில் கடந்த 14 ஆம் தேதி கரை ஒதுங்கியது. அதனை இலங்கை அதிகாரிகள் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்குப் பின் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
 அதைத்தொடர்ந்து மீனவர் முனியசாமியின் சடலம் விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை காலை கொண்டுவரப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், முனியசாமியின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களுடன் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாநில துணைத்தலைவர் குப்புராம், மாவட்ட நிர்வாகிகள் ஆத்மகார்த்தி, முத்துசாமி உள்ளிட்டோர் சடலத்தை பெற்று, இலந்தைக்கூட்டத்துக்கு கொண்டு வந்தனர்.
 இங்கு முனியசாமி சடலத்துக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், வருவாய் அதிகாரி சி.முத்துமாரி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மீனவர் முனியசாமியின் மகள்கள் முருகேஸ்வரி, சண்முகப்பிரியாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார். அப்போது ஆட்சியர் வீரராகவராவ் கூறுகையில், தமிழக அரசு, மீனவர் முனியசாமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. அத்துடன் அவரது குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புக்கான உதவியும் வழங்கப்படும் என்றார். 
 தமிழ்நாடு மீன்வளத்துறை கூட்டுறவு சங்கம் சார்பில் முனியசாமியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், மீனவர் நலவாரியம் சார்பில் ரூ.1 லட்சமும் கூடுதலாக வழங்கப்படும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com