ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறுவது அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீரில் உவர்ப்புத் தன்மை அதிகரித்து வருவதால், நிலமும் விவசாயத்துக்கு பயன்படாத நிலைக்கு மாறி வருகிறது என கடலோர உவர் மண் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியை டபிள்யூ. பேபிராணி 

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீரில் உவர்ப்புத் தன்மை அதிகரித்து வருவதால், நிலமும் விவசாயத்துக்கு பயன்படாத நிலைக்கு மாறி வருகிறது என கடலோர உவர் மண் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியை டபிள்யூ. பேபிராணி தெரிவித்தார்.  

ராமநாதபுரம் கடலோர மாவட்டம் என்பதால் மண் தன்மையை ஆராய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் சார்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு கடலோர உவர் மண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் கண்டறியப்பட்ட ஆய்வின் அடிப்படையில் விவசாயத்துக்கான நெல் பயிர்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.   இந்நிலையில், மாவட்ட அளவில் மண்ணின் தன்மை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து இம் மையத்தின் பேராசிரியை டபிள்யூ. பேபிராணி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல், உவர், களர் மண், களிமண் ஆகியன உள்ளன. 

மாவட்டத்தின் மொத்த விவசாயப் பரப்பான 4.31லட்சம் ஏக்கரில் 2.71 லட்சம் ஏக்கர் மானாவாரி விவசாய நிலமாகும். இவற்றில் கிணறு, கண்மாய் மூலம் 1.59 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால், பெரும்பகுதி நிலங்கள் விவசாயத்துக்கு பயன்படாதவகையில் அவற்றின் தன்மை மாறியுள்ளது. 

ஆகவே, இவற்றை விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், பெரும்பாலானோர் கடந்த 30 ஆண்டுகளாக விவசாயத்தை விட்டுவிட்டு ஏராளமானோர் மாற்றுத் தொழிலுக்கு செல்வதால் தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. நிலத்தை தொடர்ச்சியாக உழுத நிலையில் வைத்தாலே அதை விவசாயத்துக்குரியதாக காப்பாற்ற முடியும். மேலும், ஆடு, மாடுகளை வளர்த்தாலும் அவற்றுக்கு இரையாக இலை, தழைகள் அவசியம். அதற்காகவும் நிலத்தில் விவசாயத்தை மேற்கொள்வது அவசியம். 

நல்ல மண் என்பது மொத்த உப்புத் தன்மையில் 6 பிஎச் அளவு இருத்தல் அவசியம். ஆனால், ராமநாதபுரம் மண்ணில் 8 பிஎச் வரை உள்ளது. அதன்படி களர் உவர் நிலத்தன்மை அதிகரித்துள்ளது.  இந் நிலத்தில், இலை, தழைகள் மற்றும் தாவரங்களின் பாகங்களை மக்கி, அவற்றைத் தெளிப்பதன் மூலமே நிலத்தை விவசாயத்துக்கு ஏற்றதாக மாற்றமுடியும்.   

ராமநாதபுரத்தில் ஓடைகள் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து பெறப்படும் மணலின் தன்மைகூட  மாறிவிட்டது.

ஆகவே, அந்த மணலால் கட்டப்படும் கட்டடங்களின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி விடுகிறது.  மண் தன்மை குறித்து பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் உள்ள மண் ஆய்வகத்தில் ரூ.5 கட்டணத்தில் பரிசோதிக்கலாம். ஆனால், தனியார் யாரும் பரிசோதனைக்கு வருவதில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com