ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
By DIN | Published On : 24th June 2019 07:27 AM | Last Updated : 24th June 2019 07:27 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் 50-க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகளில் நடைபெற்று வரும் சட்ட விரோத மதுபாட்டில்கள் விற்பனையை தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் செயல்பட்ட 8 டாஸ்மாக் கடைகள் முற்றிலும் அகற்றப்பட்டன. தற்போது பாம்பன் பகுதியில் மட்டுமே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது.
இதனால் ராமேசுவரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இரு சக்கர வாகனங்களில் மதுபாட்டில்களுடன் வலம் வருகின்றனர். செல்லிடப்பேசி மூலம் தகவல் கொடுத்து விட்டால் வீட்டுக்கே வந்து மதுபாட்டில்களை விநியோகம் செய்கின்றனர். இதற்காக பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக ரூ. 50 வரை கூடுதலாக வசூல் செய்கின்றனர். இதுபோன்ற மதுபாட்டில்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகின்றன.
இதுதவிர ராமேசுவரத்தில் தற்போது 50-க்கும் மேற்பட்ட பெட்டிக் கடைகளில் சட்ட விரோத மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் கிடைக்கும். தனுஷ்கோடியிலும் மதுபாட்டில்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. இதனை போலீஸாரும் கண்டுகொள்வதில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: ராமசுவரம் பகுதியில் சட்டவிரோத மதுபாட்டில்கள் விற்பனையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள் ராமேசுவரத்தில் மதுபானக் கடை அமைக்க இடம் தேர்வு செய்ய முயலும்போதெல்லாம், பொதுமக்களுடன் சேர்ந்து சட்டவிரோத மதுவிற்பனையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸாருக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர் என்றனர்.