கிராமத்துக்கு மீண்டும் பேருந்து இயக்க பரமக்குடி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 25th June 2019 07:50 AM | Last Updated : 25th June 2019 07:50 AM | அ+அ அ- |

கமுதி அருகே உள்ள ஒரு சில கிராமங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கக் கோரி பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன்ர்பிரபாகரிடம் அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர்.
கமுதி அருகே உள்ள காக்குடி, வலையமணக்குளம், புத்துருத்தி, நகர்புளியங்குளம், எழுவனூர், கூடக்குளம், முத்துப்பட்டி பகுதிகளில் பரமக்குடி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் சதர்ன்பிரபாகர் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம், கமுதி ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.காளிமுத்து தலைமையிலும், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் கள்ளிக்குளம் முத்துராமலிங்கம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கருமலையான் முன்னிலையிலும் நடைபெற்றது.
அப்போது கிராம மக்கள், எம்எல்ஏவிடம் வலையமணக்குளத்தில் கலையரங்கம் அமைக்கவும், காக்குடி, புத்துருத்தி, நகர்புளியங்குளம் பகுதிகளுக்கு காலை, மாலை 7 மணிக்கு கமுதியிலிருந்து இயக்கப்பட்ட அரசு பேருந்து சேவை ரத்து செய்யபட்டுள்ளது. இதேபோல் கமுதியிலிருந்து இடைச்சியூரணி, பெருமாள்தேவன்பட்டி, வடுகபட்டி, மூலக்கரைபட்டி, முத்துப்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்டோக்களில் செல்லும் நிலை உள்ளது என தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் அரசு போக்குவரத்துக் கழக கமுதி கிளை மேலாளர், காரைக்குடி மண்டல மேலாளரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு, நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சேகரன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ராமச்சந்திரன் (நகரத்தார்குறிச்சி), மாரி (வேப்பங்குளம்), வில்வத்துரை (புதுக்குளம்) டி.நாகராஜ்(புத்துருத்தி) உள்பட பலர் பங்கேற்றனர்.