தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதை: இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதுடன் இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் தனுஷ்கோடி மிகப்பெரிய வர்த்தக துறைமுக நகரமாக திகழ்ந்தது. மேலும் ரயில் நிலையம், சுங்கத்துறை, தபால் நிலையம், இந்திய, இலங்கை பணம் மாற்றிக்கொள்ளும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் இருந்தன. இலங்கை, இந்திய கப்பல் போக்குவரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் டன் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்றதுடன் சுற்றுலா செல்லவும் பயன்பட்டது. இந்நிலையில்,1964 ஆம் ஆண்டு வீசிய கடும் புயல் காரணமாக தனுஷ்கோடியே உருக்குலைந்தது. அங்கிருந்த கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்தை தொடங்க முயற்சி மேற்கொண்டும் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து சாத்தியமில்லை என கூறி ரயில்வே நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. இதே போன்று தேசிய நெடுஞ்சாலைத்துறையும் சாலை அமைக்க தயக்கம் காட்டியது.
இதனிடையே, தனுஷ்கோடியை மறு சீரமைப்பு செய்ய முதல் கட்டமாக ரூ.59 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். 
இதனைதொடர்ந்து, ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 17.20 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.208 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாதை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி உள்ளார். அதே போல் பாம்பன் ரயில் பாலம் 100 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ரூ.250 கோடியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிய ரயில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்கு ராமேசுவரம் தீவுப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தனுஷ்கோடி தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கிட இந்த ரயில் பாதைகள் பயனுள்ளதாக அமையும் என தீவு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன் இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com