கீழக்கரை பாலிடெக்னிக்கில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
By DIN | Published On : 04th March 2019 07:37 AM | Last Updated : 04th March 2019 07:37 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, கல்லூரியின் தலைவர் எஸ்.எம். யூசுப் சாகிப் தலைமை வகித்தார். முதல்வர் அ. அலாவுதீன் ஆண்டறிக்கை வாசித்தார். இதில், சிறப்பு விருந்தினராக இதயம் நிறுவன அதிபர் வி.ஆர். முத்து கலந்துகொண்டு பேசினார். மேலும், கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும், கேடயமும் வழங்கினார். பாடங்களில் அதிக சதவீதம் பெற்றுத் தந்து சாதனை புரிந்த ஆசிரியர்களைப் பாராட்டி கேடயமும், பரிசும் வழங்கப்பட்டது.
இதில், ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. கே. ஹசன் அலி, முகம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன் ஏ. முகம்மது சகபர், முதல்வர் ஜெ. அப்பாஸ் முகைதீன் மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் இ. ரஜபுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர், இயக்குநர் மற்றும் செயலர் பாராட்டினர். முன்னதாக, கல்லூரியின் துணை முதல்வர் என். ராஜேந்திரன் வரவேற்றார். துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சேக் தாவூது நன்றி கூறினார்.