கமுதி அருகே முடக்கப்பட்ட உவர்ப்பு நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

கமுதி அருகே ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உப்புநீரை குடிநீராக்கும் திட்டத்தை சீரமைத்து மீண்டும்

கமுதி அருகே ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உப்புநீரை குடிநீராக்கும் திட்டத்தை சீரமைத்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
      கமுதி அருகே குண்டுகுளம், பூமாவிலங்கை, வண்ணாங்குளம், ஒழுகுபுளி, சொக்கலிங்கபுரம் ஆகிய 5 கிராமங்களில் வாழும் 2,500 குடும்பங்களுக்கு குடிநீர் வசதிக்காக ரூ. 5 கோடி மதிப்பீட்டில், உவர்ப்பு நீரை குடிநீராக்கும் திட்டம், 1997 இல், குண்டுகுளம் கண்மாயில் அமல்படுத்தப்பட்டது. இதில் பராமரிப்பு மற்றும் தண்ணீர் திறக்கும் பணியாளர் என இருவர் பணியாற்றி வந்தனர். அதன் பின் கடந்த 2010 ஆம் ஆண்டு பராமரிப்பு செலவினங்களை குறைக்க, பணியாற்றும் ஊழியர்களை கட்டாய ஓய்வில் தமிழ்நாடு குடிநீர் வாரியம் அனுப்பியது. பின்னர் இத்திட்டம் கே.வேப்பங்குளம் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிறகு 2016 ஆம் ஆண்டில் இருந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் முடிந்து, உள்ளாட்சி நிர்வாகங்கள் சிறப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பராமரித்து வந்தனர். நாளடைவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உவர்ப்பு நீரை குடிநீராக்கும்  திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை  பராமரிக்காததாலும், உவர்ப்பு நீரை குடிநீராக மாற்றும் வேதிப்பொருள்கள், சேதமடைந்த உதிரி பாகங்களை அரசு வழங்காததாலும், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, இத்திட்டம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் 5 கிராம மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். மேலும் இப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வந்த  நரிப்பையூர் கூட்டுக் குடிநீர் திட்டமும் நிதி ஒதுக்கீடு இல்லாமல், முடங்கியுள்ளது.
 தண்ணீருக்காக நாள்தோறும் டேங்கர் லாரிகளை எதிர்பார்த்து, காத்திருந்து குடம் ரூ.10-க்கு குடிக்கவும், புழக்கத்துக்கும் வாங்குகின்றனர்.   இப்படி நாளொன்றுக்கு பொதுமக்கள் ரூ.150  கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த உபகரணங்களை மீண்டும் புதிதாக அமைத்து உவர்ப்பு நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ் (கிராம ஊராட்சிகள்) கூறியதாவது: ஊராட்சிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சிறுகுடிநீர் திட்டங்கள் மட்டும் ஊராட்சி சார்பில் பராமரித்து வரப்படுகிறது. ரூ.1 கோடிக்கு மேல் உள்ள திட்டங்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தொடங்கப்பட்டு, ஊராட்சி அதிகாரிகள் அதனை பராமரித்து வருவது வழக்கம். மேலும் இத்திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com