எமனேசுவரத்தில் தேரோட்ட உற்சவம்
By DIN | Published On : 16th May 2019 07:33 AM | Last Updated : 16th May 2019 07:33 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் வைகாசி திருவிழாவில் தேரோட்டம் உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
செளராஷ்ட்ர சபைக்கு பாத்தியமான இக்கோயிலில் கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. பகல், இரவு வேளைகளில் பெருமாள் பல்வேறு அவதாரங்களிலும், வாகனங்களிலும் எழுந்தருளி ரதவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திங்கள்கிழமை ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்ட உற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்குமேல் பெருமாள் சர்வ அலங்காரத்தில் அலங்காரமாகி தேரில் எழுந்தருளினார். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மேள,தாளங்கள் முழங்க பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்த கோஷங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை எமனேசுவரம் செளராஷ்ட்ர சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.