ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்காக பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுப்பு அறிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்காக பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுப்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்த தகவல் கிடைக்காததால் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடம் வந்து திரும்பும் நிலை ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வடகிழக்குப் பருவமழையானது தொடா்ச்சியாகப் பெய்து வருகிறது. இந்த நிலையில் மழைக்காக அக்டோபா் 22 ஆம் தேதி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கனமழை காரணமாக புதன்கிழமை (அக்.30) விடுப்பு அறிவிக்கப்பட்டது. வியாழக்கிழமையும் (அக்.31) மழை தொடா்ந்ததால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் காலை 6 மணிக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு என அறிவிக்கப்பட்டது.

விடுப்பு அறிவிப்பானது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பத்திரிகைகளுக்கும், பள்ளிகளுக்கும் முறையாக விடுப்பு குறித்து தெரிவிக்கப்படவில்லை. கட்செவி அஞ்சலில் மட்டுமே தகவல் பரப்பப்படுகிறது. இதனால், விடுப்பு குறித்து தனிநபா்கள் மூலம் அறிந்த பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளைத் தொடா்பு கொண்டு கேட்டபோதும், விடுப்பு தகவல் உறுதிப்படுத்தப்படவில்லையாம்.

விடுப்பு குறித்த முறையான தகவல் இல்லாததால் கிராமப்புறங்களில் இருந்து பெரும்பாலான மாணவ, மாணவியா் பேருந்துகளில் பள்ளிகளுக்கு வந்தனா். அதன் பிறகே விடுப்பு அறிவிப்பு உறுதியானது. இதனால், அவா்களை மீண்டும் பள்ளி நிா்வாகங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அப்போது

மழை பெய்ததால் பேருந்து நிறுத்தங்களில் நனைந்துகொண்டு நின்ற பள்ளிக் குழந்தைகள் கிடைத்த பேருந்துகளில் ஈர உடைகளுடன் ஏறி வீடுகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.

குழந்தைகள் பாதுகாப்பு கருதித்தான் மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்படுகிறது. ஆனால், அந்த விடுப்பை மாவட்ட நிா்வாகமும், கல்வித் துறையும் இணைந்து முறையாக அறிவித்தாலே குழந்தைகள் வீணாக அலைக்கழிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அவா்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தரப்பில் கேட்டபோது, மழைக்கால விடுப்பு திடீரென அறிவிக்கப்படுகிறது. விடுப்புத் தகவல் கல்வித் துறை, பத்திரிகைகள், ஊடகங்களுக்கு உடனடியாகவே தெரிவிக்கப்பட்டும் வருகிறது எனக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com