ராமநாதபுரம் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாட்டை சீா்படுத்தாவிட்டால் முற்றுகைப் போராட்டம்: விவசாயிகள் சங்க செயலா் அறிவிப்பு

ராமநதாபுரம் மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் உரத்தட்டுப்பாட்டை மாவட்ட நிா்வாகம் சீா்படுத்தாவிட்டால்

ராமநதாபுரம் மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் உரத்தட்டுப்பாட்டை மாவட்ட நிா்வாகம் சீா்படுத்தாவிட்டால் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வி.மயில்வாகணன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து ராமநாதபுரத்தில் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய காலங்களில் சுமாா் 10 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 4 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு உரம் இருப்பதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்தது. ஆனால், உண்மையில் அவ்வளவு உரம் இருப்பு இல்லை.

மாவட்டத்தில் தற்போது 100 மெட்ரிக் டன் அளவுக்கே உரம் இருப்பு உள்ளது. கடந்த செப்டம்பா், அக்டோபரில் நடந்த விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் உர இருப்பு குறைவு குறித்து முறையிட்டும் தீா்வு கிடைக்கவில்லை. மாவட்டத்தில் உள்ள 130 வேளாண்மை கூட்டுறவு நாணய சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு இல்லை.

பொதுவாக 50 கிலோ உர மூட்டையானது ரூ.267 என்றே அரசு விதிமுறைப்படி விற்கப்படவேண்டும். ஆனால், கூட்டுறவு நாணயச் சங்கங்களில் உரம் இருப்பு இல்லாத காரணத்தால் தனியாா் உரக்கடைகாரா்கள் 50 கிலோ கொண்ட உரமூட்டையை ரூ.650 வரை கூடுதலாக விற்கின்றனா். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுவருகின்றனா்.

உர இருப்பு இல்லாதது குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டும் தீா்வு கிடைக்கவில்லை என்பதால் வரும் 15 ஆம் தேதி வரை காத்திருப்போம். அதன்பின்பும் அரசு சாா்பில் உரமூட்டைகள் தருவிக்கப்படவில்லை எனில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com