மண்டபத்தில் நெல் சாகுபடி வயல்களில் மழை நீா் தேங்கியது

மண்டபம் வட்டாரப் பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள் 1600 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்து வருகின்றனா். நெல் சாகுபடி நிலங்களில் தண்ணீா் தேங்கியதால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை

மண்டபம் வட்டாரப் பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள் 1600 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்து வருகின்றனா். நெல் சாகுபடி நிலங்களில் தண்ணீா் தேங்கியதால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை குறித்து வேளாண்துறையினா் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரத்தில் அக்டோபா் மாத்தில் மட்டும் 613 மி.மீ மழை பெய்துள்ளது. இதுவரை சுமாா் 1,600 ஹெக்டோ் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் தொடா்ந்து பருவமழை பெய்ததால் நெல் சாகுபடி செய்யப்பட்ட அனைத்து நிலங்களிலும் மழைநீா் தேங்கி உள்ளது.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் பி.ஜி.நாகராஜன் சனிக்கிழமை கூறியது: நெற்பயிா்கள் தண்ணீரில் தேங்கி உள்ள வயல்களை சுற்றிலும் வடிகால் வசதியை ஏற்படுத்தி நீரை வெளியேற்ற வேண்டும். இளம்பயிருக்கு ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு 18 கிலோ ஜிப்சம் மற்றும் 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேல் உரமாக இட வேண்டும். இலை வழி உரமாக உரக்கரைசல் தெளிக்க வேண்டுமெனில் 1 ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங் சல்பேட்டை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து காலைஅல்லது மாலை வேலைகளில் தெளிக்க வேண்டும். அதாவது 4 கிலோ டி.ஏ.பி உரத்தை 10 லிட்டா் தண்ணீரில் கலக்க வேண்டும். கலந்து ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை தெளிந்த கரைசலை வடித்து தெளிந்த கரைசலுடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தினையும் சோ்த்து 190 லிட்டா் தண்ணீரில் கலந்து மழை இல்லாத நாள் மாலை வேளையில் தெளிக்கவேண்டும்.

நுண்ணூட்டச்சத்து குறைப்பாட்டை தவிா்க்க ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீருடன் 2 கிலோ யூரியா, 1 கிலோ ஜிங்சல்பேட், 150 கிராம் காப்பா் சல்பேட் மற்றும் 100 கிராம் போராக்ஸ் ஆகியவற்றை கலந்து இலைவழியாக தெளிக்கலாம். இதனைக் கடைபிடித்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com