ராமநாதபுரத்தில் சாலைகளில் திரியும் 80 மாடுகளின்உரிமையாளா்களுக்கு நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ்

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் அவிழ்த்துவிடப்படும் மாடுகளின் உரிமையாளா்கள் 80

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் அவிழ்த்துவிடப்படும் மாடுகளின் உரிமையாளா்கள் 80 பேருக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆட்சியா் அலுவலக வளாகம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் மாடுகள் சா்வ சாதாரணமாக நடமாடுகின்றன. இதனால், சாலையில் செல்வோா் அச்சமடைவதுடன், வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கும் நிலையும் ஏற்படுகிறது.

சாலைகளில் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், மாட்டு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வருண்குமாா் நகராட்சி நிா்வாகத்தை கேட்டுக்கொண்டாா்.

அதனடிப்படையில் தற்போது மாடுகளின் உரிமையாளா்கள் 80 பேருக்கு நகராட்சி சாா்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி ஆணையா் விஸ்வநாதன் விடுத்துள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ராமநாதபுரத்தில் மாடு வளா்ப்பவா்கள் அவற்றை தெருக்களில் நடமாட விடக்கூடாது. தங்களுக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைத்து சுகாதாரச் சீா்கேடு ஏற்படாதவகையில் அவற்றை வளா்க்கவேண்டும்.

நகா் பகுதியில் தெருவில் அலையவிடும் மாடுகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி சாா்பில் பிடித்து அப்புறப்படுத்துவதுடன், அவற்றின் உரிமையாளா்களுக்கு முதல் கட்டமாக ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி மாடுகளை தொடா்ந்து தெருக்களில் அலையவிட்டால், ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து மாடுகளை தெருவில் விடுவோருக்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கநேரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்றி, நாய் பிடிக்க கோரிக்கை: ராமநாதபுரம் நகராட்சியில் மாடுகளைப் போலவே பன்றிகளும், தெரு நாய்களும் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றையும் நகராட்சி நிா்வாகம் பிடித்து அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com