அறிவியல் கருத்தரங்கு போட்டி: ராமநாதபுரம் மாணவி தேர்வு

தேசிய அறிவியல் கருத்தரங்கு போட்டியில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த முதல்கட்டத்

தேசிய அறிவியல் கருத்தரங்கு போட்டியில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த முதல்கட்டத் தேர்வில் தனியார் பள்ளி மாணவி யாமினி மாநில அளவிலான தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார். 
 மனித நலனில் தனிம வரிசைப் பட்டியலின் தாக்கம் எனும் தலைப்பில் தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்க போட்டி நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவியரைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு இருவர் என்ற அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 கல்வி மாவட்டங்களில் இருந்து 120 பேர் திங்கள்கிழமை வரவழைக்கப்பட்டு அவர்களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். 
 முதல் கட்ட சோதனையில் தேர்வான ஆறு பேரில் இருந்து சென்னையில் மாநில அளவில் நடைபெறும் சோதனையில் பங்கேற்கும் ஒருவரைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நகராட்சி பாரி வள்ளல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 
இத்தேர்வுக்கு ராமநாதபுரம் கல்வி மாவட்டத்திலிருந்து வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி யாமினி, செய்யதம்மாள் மெட்ரிக் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி பிருந்தாவன கிருபா, பரமக்குடி கல்வி மாவட்டத்திலிருந்து முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவர் வினோத், கீழத்தூவல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அரவிந்த், மண்டபம் கல்வி மாவட்டத்தில் இருந்து கடுகுசந்தை அரசு உயர்நிலைப் பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவர் ஜாஸ்பர் சாலமோன், கீழக்கரை கைரத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவி ஆயிஷத் ரஷ்பா ஆகிய 6 பேர் பங்கேற்றனர். 
இதில் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவி யாமினி முதலிடம் பெற்றார். அவர் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கிற்கான தேர்வில் பங்கேற்கவுள்ளார் எனக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com