கோஷ்டிப் பூசலின் பிடியில் ராமநாதபுரம் மாவட்டக் காங்கிரஸ்!

தமிழக காங்கிரஸில் ஏற்கெனவே பல கோஷ்டிகளாக நிர்வாகிகள் செயல்பட்டுவரும் நிலையில்,
கோஷ்டிப் பூசலின் பிடியில் ராமநாதபுரம் மாவட்டக் காங்கிரஸ்!

தமிழக காங்கிரஸில் ஏற்கெனவே பல கோஷ்டிகளாக நிர்வாகிகள் செயல்பட்டுவரும் நிலையில், தற்போது செயல் தலைவர்களின் ஆதரவாளர்கள் என புதுக்கோஷ்டி உருவாகியுள்ளதாக மாவட்டத் தலைவர்கள் புகார் கூறுகின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவராக எஸ். திருநாவுக்கரசர் இருந்தபோது தனது ஆதரவாளர்களை மாவட்டத் தலைவர்களாக நியமித்தார். அவருக்குப் பிறகு கே.எஸ்.அழகிரி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதுடன், சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் உள்ளிட்ட 4 பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த செயல் தலைவர்களுக்கு தலா 13 மாவட்டங்கள் என பிரித்து கண்காணிக்கும் பணி தரப்பட்டுள்ளது. மத்திய தலைமையிலிருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை செயல் தலைவர்கள் கண்காணித்து வருகின்றனர்.  
ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தெய்வேந்திரன். இவர் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசரின் ஆதரவாளர். இங்கு ஏற்கெனவே ப. சிதம்பரம் ஆதரவாளர் உள்ளிட்ட பல கோஷ்டிகளாக கட்சியினர் உள்ள நிலையில்,  முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரான மலேசியா பாண்டியனுக்கு ஆதரவாகவும் சிலர் செயல்படுகின்றனர். கட்சி சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்குக் கூட இந்த காங்கிரஸ் கோஷ்டிகள் ஒன்று சேர்வதில்லை. 
கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜீவ்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் தற்போதைய மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், நிகழ்ச்சியில் பட்டிமன்றம் நடத்த மாநில செயல் தலைவரும், மாவட்டக் கண்காணிப்பாளருமான மயூரா ஜெயகுமார் கூறியுள்ளார். 
அதற்கு கால அவகாசம் இல்லை என மாவட்டத் தலைவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சிக்கு மயூரா ஜெயகுமார்  வரவில்லை. ஆனாலும்,  கூட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநில செயல் தலைவருக்கும், மாவட்டத் தலைமைக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. 
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கைதானபோது, முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமையில் ராமநாதபுரத்தில் திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தற்போதைய கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை. அன்று மாலை மாவட்ட கட்சி சார்பில் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் பின்னணியிலும் செயல் தலைவர் இருப்பதாக திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 
மயூரா ஜெயகுமார் கோஷ்டி: இந்தநிலையில், திருப்புல்லாணியில் தனிநபர் ஊருணியை தூர்வாரிய விழாவை மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை அழைத்து நடத்த சிலர் ஏற்பாடு செய்தனர். ஆனால், இதுகுறித்து மாவட்டத் தலைவர் தெய்வேந்திரனுக்கு தெரிவிக்கவில்லையாம். கடந்த 8 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி குறித்த விளம்பரங்களில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பெயரோ, படமோ இடம் பெறவில்லை. ஆனால், மயூரா ஜெயகுமார் உள்ளிட்டோர் படம், பெயர் பெற்றிந்தன. இதனால் மாவட்டத் தலைவர் தரப்பில் சத்தியமூர்த்தி பவனைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோதுதான், திருப்புல்லாணி நிகழ்ச்சியானது செயல் தலைவர் மயூரா ஜெயகுமாரை முன்னிலைப்படுத்தி நடத்தப்படுவது தெரியவந்துள்ளது. 
நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் வந்த மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை, சிக்கல் எனும் இடத்தில் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து வரவேற்றார். அப்போது தனக்கு எதிராக போட்டி நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும்,  அதற்கு மாநிலத் தலைவர் செல்வது சரியாகாது என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.  இதனால், ராமநாதபுரம் நகர் வரை வந்த கே.எஸ்.அழகிரி, திருப்புல்லாணி பகுதி நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் மட்டும் சென்றுள்ளார். 
ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் புகார்: நிகழ்ச்சியன்று ராமநாதபுரத்தில் மாவட்டத் தலைவரின்றி செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி,  கட்சியின் கோஷ்டி பூசல் குறித்த கேள்விகளுக்கு மழுப்பிவிட்டு கிளம்பினார்.  பிரச்னை அத்துடன் முடியவில்லை. ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பிரச்னை குறித்து மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன்,  செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், அவரது ஆதரவாளர்கள் மீது புகாரும் கூறப்பட்டுள்ளது. மேலும், திருப்புல்லாணியில் மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு தெரிவிக்காமல் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும், அதற்கான விளம்பரத்தை வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் திருநாவுக்கரசு கோஷ்டியினர் வலியுறுத்தியுள்ளனர்.    
 இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கூறுகையில், செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் கண்காணிக்கும் ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் அவரால்தான் பிரச்னை ஏற்படுகிறது. இதுபோல ஒவ்வொரு செயல் தலைவரும் தனிக்கோஷ்டி உருவாக்கினால், கட்சி எப்படி வளரும் என்கின்றனர்.    
இப்பிரச்னை குறித்து ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரனிடம் கேட்டபோது, கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்டத் தலைவராகியுள்ளேன். ஆனால், செயல்தலைவர் மயூரா ஜெயகுமாரின் செயல்பாடு கட்சி வளர்ச்சிக்கு நல்லதல்ல. அவர்மீதும், திருப்புல்லாணி நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீதும்  மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் புகார் மனு அளித்துள்ளோம் என்றார். 
இதுகுறித்து திருப்புல்லாணி பகுதியில் நிகழ்ச்சி நடத்தியவர்கள் தரப்பில் கூறியது: 
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் வேறு கட்சியிலிருந்து வந்தவர். ஆகவே அவருக்கு காங்கிரஸ் பாரம்பரிய நடைமுறைகள் தெரியவில்லை. கட்சியினரை அரவணைத்துச் செல்ல மறுக்கிறார். ஆகவே கட்சியின் வேறு கிளை அமைப்பு சார்பில் முறைப்படி மாநிலத் தலைவரது அனுமதி பெற்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம். இதில் தவறில்லை. மாநில செயல் தலைவர் கட்சி நலனுக்கே பாடுபடுகிறார். அவர் மீது குறை கூற முடியாது என்கின்றனர். 
கட்சியின் மாநிலச் செயல் தலைவரும், ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளருமான மயூரா ஜெயகுமார் கூறுகையில், கட்சித் தலைமை கூறுவதை மாவட்ட தலைவர்களிடம் தெரிவித்து  செயல்பட அறிவுறுத்துகிறேன். ஆனால், சிலர் அதைப்புரிந்து கொள்ளாமல் என்மீது கோபப்படுகின்றனர். ராஜீவ்காந்தி பஞ்சாயத்து சங்கம் நடத்திய நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவரே ஒப்புதல் அளித்துள்ளார். அவரது ஆலோசனைப்படியே விழாவில் கலந்துகொண்டேன். ஆகவே என்மீது புகார் கூறுவோர் மீது கட்சியே தன் கடமையைச் செய்யும். நெல்லையில் மாநிலத் தலைவர் பங்கேற்கும் கூட்டத்தில் அவரது கவனத்துக்கு வராமலேயே நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி போட்டி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இது கட்சி நலனுக்கு எதிரானது என்றே கண்டித்தேன். இது தவறா என்றார். 
காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி: கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதுகுளத்தூரில் கட்சியின் முன்னாள் தலைவர் சோ.பாலகிருஷ்ணனின் சிலை திறப்பு விழா நடந்தது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், காங்கிரஸ் இந்திய அளவில் வலிமை குன்றிவிட்டதாக குறிப்பிட்டார். ஆனால், அதற்கு மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அச்சம்பவத்திலேயே கட்சி நிர்வாகிகள் மீது அதிருப்தியில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள், தற்போது கட்சிக்குள்ளேயே நிர்வாகிகள் கோஷ்டிகளாகச் செயல்பட்டுவருவது அதிருப்தியளிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com