தேசிய மக்கள் நீதிமன்றங்களால் நிலுவை வழக்குகள் குறைகின்றன

தேசிய மக்கள் நீதிமன்ற நடவடிக்கையால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளன என்று ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் கூறினார். 

தேசிய மக்கள் நீதிமன்ற நடவடிக்கையால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளன என்று ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் கூறினார். 
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை காலை நடைபெற்றது. 
மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் பேசியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆவது முறையாக நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் 14 அமர்வுகள் மூலம் 2,079 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் வெள்ளிக்கிழமை மாலை வரையில்1,217 வழக்குகளுக்குத் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. அதன்படி ரூ.4.34 கோடிக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 
 மக்கள் நீதிமன்றத்தில் இருதரப்பினருக்கும் சாதகமான நிலையே ஏற்படும். இதில் யாரும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை. கடந்த முறை நடந்த மக்கள் நீதிமன்றத்தினை விட தற்போது கூடுதலான வழக்குகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளன. 
ஆகவே நிலுவையில் உள்ள வழக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்றார். 
முன்னதாக் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான ப்ரீத்தா வரவேற்றார். மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, செயலர் நம்புநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் கடந்த மார்ச் 9 ஆம் தேதி நடந்தபோது 879 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி ரூ.4.8 கோடி மதிப்புக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 13 ஆம் தேதி நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,634 வழக்குகளுக்குத் தீர்வு எட்டப்பட்டது. அதன்படி ரூ.3.12 கோடிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com