கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள்: உத்தேச பதிவு மூப்பு விவரம்: இன்று  மாலைக்குள் சரிபார்க்கலாம்

தமிழக அளவில் கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்படவுள்ள

தமிழக அளவில் கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்படவுள்ள ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உத்தேச பதிவு மூப்பு விவரத்தை புதன்கிழமை (செப்.25) மாலைக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
 இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்  சார்பில் ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:   மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பான மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்புப் பட்டியல் தயார் செய்து அனுப்பப்படவுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பரிந்துரை செய்யப்படவுள்ள பதிவுதாரர்கள் விவரம் அறிவிக்கப்படுகிறது. கல்வித்தகுதியாக 15.11.2012- க்கு முன்பு சான்று பெற்றவர்களாக இருக்க வேண்டும்.  அதன்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய செவிலியர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பயிலகங்களில் 18 மாத கால பயிற்சி முடித்து,  தமிழ்நாடு செவிலியர் குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும்.  
 மேலும் 15.11.2012 -க்குப் பின்னர் சான்று பெற்றவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய செவிலியர் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பயிலகங்களில் 2 வருட கால பயிற்சி முடித்து, தமிழ்நாடு செவிலியர் குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும். 
01.07.2019 தேதியன்று அனைத்து வகுப்பினருக்கும், (மாற்றுத்திறனாளிகள் உள்பட) 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளில் இதர பிரிவினரை சேர்ந்தவர்கள் 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆகவே விதிகளின்படி கல்வித்தகுதி, வயது வரம்பு உடைய வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் புதன்கிழமை (செப்.25)
மாலைக்குள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஜாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் ஒளி நகல்களுடன் நேரில் வருகை தந்து தங்களது பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com