கமுதி நீதிமன்ற கட்டடத்துக்கான நிலம் அளவிடும் பணி தொடக்கம்

கமுதியில் 25 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த உரிமையியல் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட நிலம் அளவிடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 


கமுதியில் 25 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த உரிமையியல் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட நிலம் அளவிடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கமுதி கோட்டைமேட்டில் உள்ள காதி கதர் கிராம வாரிய கட்டடத்தில் வாடகை ஒப்பந்த அடிப்படையில் கமுதி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றம் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதனிடையே அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய  கட்டடம் கட்ட தமிழக அரசுக்கும், மாவட்ட நீதித்துறைக்கும் வழக்குரைஞர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தற்போது செயல்பட்டு வரும் நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலேயே தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியத்துக்கு சொந்தமான 2.69 ஏக்கர் நிலத்துக்கு ரூ.1.55 கோடியை தமிழக பொதுப் பணித்துறை சார்பில் தமிழ்நாடு கதர் கிராம வாரியத்துக்கு கொடுக்கப்பட்டது. 
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும், நீதிமன்ற புதிய கட்டடம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் விடா முயற்சியால், அரசு ஒதுக்கிய இடத்தை அளவிடும் பணி வழக்குரைஞர் சங்கத் தலைவர் முனியசாமி தலைமையில், செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இந்நிலையில், இதன் அருகில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்த சிலர் இதில் ஆக்கிரமித்து சுற்றுச் சுவர்களை எழுப்பியுள்ளனர் என்றும், எனவே, நிலத்தினை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே புதிய நீதி மன்ற கட்டடம் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்றும் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கமுதி வழக்குரைஞர் சங்கத் தலைவர் முனியசாமி, செயலர் சண்முகசுந்தரம்  ஆகியோர் கூறியது:
மாவட்ட நீதித்துறை நிர்வாகத்தின் முயற்சியால் புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட நிலம் அளவிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நீதி மன்றத்திற்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் மாவட்ட நீதித் துறை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று முறையாக அகற்றப்பட்டு, பொதுப் பணித் துறை மூலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com