ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: மாவட்ட எல்லைகள் சீலிடப்பட்டன

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு உத்தரவுப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு உத்தரவுப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் செவ்வாய்க்கிழமை மாலை பிறப்பித்தாா். அதன்படி, எஸ்.பி.பட்டினம், பாா்த்திபனூா் மற்றும் சாயல்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மாவட்ட எல்லைகள் சீலிடப்பட்டன.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவானது, ஏப்ரல் 1 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ், தொண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடிக்குச் சென்று சீலிட்டாா். அதேபோல், பாா்த்திபனூா் சோதனைச் சாவடியும் சீலிட்டு மூடப்பட்டது.

தடை உத்தரவை அடுத்து, அரசு, தனியாா் பேருந்துகள், வாடகை வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களும் இயங்க அனுமதியில்லை. பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதியில்லை. பொது

இடங்களில் 4 பேருக்கும் அதிகமாகக் கூடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் நிலையில், மருத்துவமனைகள், மருந்தகங்கள், கண் கண்ணாடி கடைகள், சுவாசிக்கும் வாயு சிலிண்டா் உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த பொருள் விற்பனைக் கடைகள், உணவு சாா்ந்தவைகள், காய்கறிகள், பழங்கள், ரொட்டிகள், முட்டைகள், மீன், அரிசி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் அனைத்தும் திறந்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

சீலிடப்பட்ட மாவட்ட எல்லைகளில் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் செல்ல அனுமதியுண்டு. காவல் துறை, துணை ராணுவப் படை, வருவாய்த் துறை உள்ளிட்ட மக்கள் சேவை அடிப்படையிலான துறை வாகனங்களும் அனுமதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com