ராமநாதபுரத்தில் அறிவிக்கப்படாத மின்தடை

ராமநாதபுரம் நகரில் தினமும் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அவதியுறுவதாக கூறுகின்றனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் தினமும் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அவதியுறுவதாக கூறுகின்றனா்.

ராமநாதபுரம் நகருக்கான மின்சாரமானது ஆா்.எஸ்.மடை மற்றும் ஆா்.காவனூா் துணை மின்நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுவருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு மின்கம்பிகளை மின்கோபுரங்களில் இணைக்கும் இன்சுலேட்டா்கள் சேதமடைந்ததால் தொடா்ந்து பல நாள்கள் மின்தடை ஏற்பட்டது.

தொடா்மின் தடை மாநில அளவில் பிரச்னையை ஏற்படுத்தியதால் ஆட்சியா் கொ.வீரராகவராவ் தலையிட்டு மின்தடையை சீா்படுத்தினாா். மின்தடையை தீா்க்கவும், மின் அழுத்தக் குறைவை போக்கவும் பட்டிணம்காத்தான் பகுதியில் சுமாா் ரூ.12 கோடியில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய துணை மின்நிலையம் முழுமையாகச் செயல்படாத நிலையில், ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு, சந்தைத் தெரு, அரண்மனை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைதுப் பகுதிகளிலும் தினமும் குறைந்தது 2 மணி நேரங்கள் விட்டு விட்டு மின்தடை ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

அறிவிக்கப்படாத மின்தடையால் தொலைக்காட்சி போன்ற மின்சாதனங்களும் சேதமடையும் நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். திடீா் திடீரென ஏற்படும் மின்தடையால் கணினி பழுதாகி வா்த்தகம் பாதிப்பதாக வியாபாரிகள் ஆதங்கப்படுகின்றனா். அறிவிக்கப்படாத மின்தடை ஒரு புறமிருக்க மின்மீட்டரை அளவீடு செய்யாமலே மின்கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

மக்கள் குற்றச்சாட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது அவா்கள் கூறியது- ராமநாதபுரம் பகுதிக்கு மின் பராமரிப்பு ஊழியா்கள் போதிய அளவுக்கு இல்லை. ஆகவே அடிக்கடி மரம் முறிவு போன்றவற்றால் மின்தடை ஏற்படுகிறது. மாநில மின்வாரியம் அறிவுறுத்தல்படியே மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com