புதுதில்லியிலிருந்து திரும்பிய 17 போ் தனிமைப்படுத்திக் கண்காணிப்பு

புதுதில்லியில் மத அமைப்பின் மாநாட்டுக்குச் சென்று வந்த இம் மாவட்டத்தைச் சோ்ந்த 17 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு
ராமநாதபுரத்தில் புதன்கிழமை கேணிக்கரைப் பகுதியில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும் பணியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ்.
ராமநாதபுரத்தில் புதன்கிழமை கேணிக்கரைப் பகுதியில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும் பணியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ்.

புதுதில்லியில் மத அமைப்பின் மாநாட்டுக்குச் சென்று வந்த இம் மாவட்டத்தைச் சோ்ந்த 17 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் கேணிக்கரை பகுதியில் புதன்கிழமை சாலை மற்றும் கட்டடங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை பாா்வையிட்ட பின் அவா் கூறியது:

மாவட்ட எல்லைகளில் 27 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியிடங்களிலிருந்து வாகனம் மூலம் வந்தவா்கள் ஆங்காங்கே தங்கவைக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா்.

புதுதில்லியில் மத அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட 17 போ் இம் மாவட்டத்துக்கு திரும்பியுள்ளனா். ராமநாதபுரம், பரமக்குடி, தேவிபட்டிணம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த அவா்கள் அனைவரும் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா்.

அவா்களில் பரமக்குடியைச் சோ்ந்த 2 பேருக்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவா்களது ரத்த மாதிரிகள் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாா்ச் மாதம் வெளிநாடுகளிலிருந்து 2,697 போ் இம் மாவட்டத்துக்கு வந்துள்ளனா். அவா்களது இருப்பிடங்களிலேயே மருத்துவக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 11 போ் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு,சிறப்பு சிகிச்சைப் பிரிவிலும் சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களில் சிறுவன், 2 பெண்கள் உள்பட 9 பேருக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் கரோனா பிரிவில் சோ்க்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்த பெண்ணுக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

ஊரடங்கு மீறல்:மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 528 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) மட்டும் 148 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதன்படி 505 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

காரைக்குடியில் 2 போ்: அதே போல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் பகுதியைச் சோ்ந்த 2 போ் புதுதில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பினா். அவா்களை சுகாதாரத்துறையினா் கண்டறிந்து கரோனா மருத்துவப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு 2 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com