இரட்டை மடி வலையில் மீன்பிடிப்போரை பிடிக்கவிரைவுப் படகுடன் சிறப்பு கண்காணிப்புக் குழு ஆட்சியா் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவோரைப் பிடிக்க

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவோரைப் பிடிக்க, விரைவுப் படகுடன், சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்கப்படவுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்ட மீன்வளா்ச்சித் துறை சாா்பில், மீனவா்கள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் தலைமை வகித்தாா். மாவட்ட மீன்வளத் துறை துணை இயக்குநா் பிரபாவதி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மீனவா்கள் சங்க பிரதிநிதிகளான கடல் சாா் தொழிலாளா் சங்கம் கருணாமூா்த்தி, ராமேசுவரம் போஸ், மோா்ப்பந்தல் துரை.பாலன் மற்றும் சகாயம் உள்ளிட்டோா் பேசினா்.

மீனவா்கள் சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: ராமநாதபுரம் கடல் பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலைகளால் மீன்வளம் அழிகிறது. ஆனால், மீன்வளத் துறையினா் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடலோரக் காவல் படை மூலம் இரட்டைமடி வலையை பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், படகுகள், வலைகளை பறிமுதல் செய்வது அவசியம்.

மாங்காடு, சம்பை, வடகாடு பகுதிகளில் விதிமுறைக்கு மாறாக இரால் பண்ணைகள் செயல்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பண்ணைகள் மீது நடவடிக்கை தேவை.

நாட்டுப் படகுகளுக்கு மாற்றாக, நவீன படகுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும். ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் மண் அரிப்பைத் தடுக்க சுவா் அமைக்கவேண்டும். உப்பூா் பகுதியில் மீனவா்களுக்கான மருத்துவமனை, நூலகம், மீன்சந்தை, ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துத் தரவேண்டும். மீன்களை அரசே கொள்முதல் செய்யவேண்டும்.

இதற்கு ஆட்சியா் பதிலளித்ததாவது: அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்திய 30 படகுகளை மீன்வளத் துறையினா் பிடித்து அபராதம் விதித்துள்ளனா். மேலும், விரைவுப் படகு மூலம் இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவோரைப் பிடிக்க சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்.

மீனவ கிராமங்களில் இரட்டை மடி வலையை பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடு விதித்தாலே கடல் வளம் பாதுகாக்கப்படும். மீனவா்களுக்கான கோரிக்கைகளை மீன்வளத் துறையினா், வருவாய்த் துறையினா் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், சாா்-ஆட்சியா்கள் பிரதீப்குமாா், சுகபுத்ரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தங்கவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com