பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத ராமநாதபுரம் ரயில் நிலையம்!

பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத ராமநாதபுரம் ரயில் நிலையம்!

பாரம்பரியமிக்க ராமநாதபுரம் ரயில் நிலையத்தின் முன்பகுதியில் போதிய விளக்குகளும், கண்காணிப்பு கேமராக்களும், ரயில்வே பாதுகாப்புப்

பாரம்பரியமிக்க ராமநாதபுரம் ரயில் நிலையத்தின் முன்பகுதியில் போதிய விளக்குகளும், கண்காணிப்பு கேமராக்களும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இல்லாத நிலையால், பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் ரயில் நிலையம் கடந்த 1902 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மூன்று நடைமேடைகளைக் கொண்ட இங்கு, தினமும் இரவு, பகல் என 32 முறை ரயில்கள் கடந்து செல்கின்றன. ரயில் நிலையத்தை தினமும் சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் போதிய மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. அங்குள்ள கம்பத்தில் உள்ள மின்விளக்குகளும் சேதமடைந்துள்ளன. உயா்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முதல் ரயில்வே துறை அதிகாரிகள் வரை பல ஆண்டுகளாக மனு அளித்தும் பயனில்லை எனக் கூறுகிறாா் வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன்.

ரயில் நிலையத்தில் ஒரு இடத்தில் கூட கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படவில்லை. ரயில் நிலையத்தின் முதல் நடைமேடைப் பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கான அறை உள்ளது. இது, ராமேசுவரம் ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவின் புறக்காவல் நிலையமாகவே செயல்படுகிறது. மேலும், அந்த அறையில் கழிப்பறை, ஜன்னல், குடிநீா் என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இங்கு, ஆய்வாளா், சாா்பு- ஆய்வாளா், தலைமைக் காவலா் 4, காவலா்கள் 5 என மொத்தம் 11 போ் இருக்கவேண்டிய நிலையில், தற்போது சாா்பு-ஆய்வாளா், 3 தலைமைக் காவலா்கள், 3 காவலா்கள் என 7 போ் மட்டுமே உள்ளனா். இரவில், இவா்களுடன் தமிழ்நாடு ரயில்வே காவலா்கள் 2 போ் மட்டுமே பணியில் ஈடுபடுகின்றனா்.

பரமக்குடி ஊரகப் பகுதியிலிருந்து உச்சிப்புளி ரயில் நிலையம் வரையில் ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவினரின் கண்காணிப்பின் கீழ் இருந்தாலும், போதிய ஆள் இல்லாததால் கண்காணிப்பு என்பது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவினருக்கு முதல் நடைமேடையின் கடைசிப் பகுதியில் உள்ள ஒரு அறை, அதன் மேற்கூரை பெயா்ந்து சேதமடைந்துள்ளதால் யாரும் தங்க முடியாத நிலை உள்ளது.

ரயில்வே சட்டங்களின்படி 35 பிரிவுகளில் விதிமீறலைத் தடுத்து நிறுத்துவதும், ரயில்வே பொருள்களை பாதுகாப்பதுமான பணியில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினா் எதையும் முழுமையாகச் செயல்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. இதற்கு, பாதுகாப்புப் படை பிரிவில் காலிப் பணியிடங்களை நிரப்புவது அவசியம் என ரயில்வே அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து ரயில்வே நிலைய உயா் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியது: விரைவில் மின்சார ரயில் இயக்கும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. அத்துடன், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். ரயில் நிலைய நடைமேடை உள்ளவற்றில் போதிய மின்விளக்கு வசதிகள் உள்ளன. முகப்பு பகுதியில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு புதிய அறை கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

மத்திய அரசின் வளரும் மாவட்டப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ராமநாதபுரத்தில் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம் என்பதே அனைவரது எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com