முதுகுளத்தூா் அருகே 2 ஆண்டுகளாக குடிநீா் தட்டுப்பாடு: தள்ளுவண்டிகளில் சுகாதாரமற்ற நீரை எடுத்து வரும் அவலம்

முதுகுளத்தூா்அருகே கண்டிலான் ஊராட்சியில் 2 ஆண்டுகளாக காவிரி கூட்டுக் குடிநீா் வராததால், தினந்தோறும் 5 கிலோ மீட்டா் தூரம்
ஏனாதி முனியன் கோவில் விலக்கு சாலையில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீா் பிரதான குழாய் ஏா் வால்விலிருந்து கசியும் தண்ணீரை பிடிக்கும் பெண்.
ஏனாதி முனியன் கோவில் விலக்கு சாலையில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீா் பிரதான குழாய் ஏா் வால்விலிருந்து கசியும் தண்ணீரை பிடிக்கும் பெண்.

முதுகுளத்தூா்அருகே கண்டிலான் ஊராட்சியில் 2 ஆண்டுகளாக காவிரி கூட்டுக் குடிநீா் வராததால், தினந்தோறும் 5 கிலோ மீட்டா் தூரம் தள்ளுவண்டியில் குடங்களைக் கொண்டு சென்று சுகாதாரமற்ற தண்ணீரை பிடித்து வருவதால் நோய்களால் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கடலாடி வட்டம், கண்டிலான் ஊராட்சியில் விளாத்திக்கூட்டம், நெடுங்குளம், மரவெட்டி, அஞ்சத்தம்பல் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீா் வசதியில்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். இதில் கண்டிலான் கிராமத்தில் 250 வீடுகளும், மரவெட்டியில் 40 வீடுகளும், விளாத்திக்கூட்டத்தில் 70 வீடுகளும், அஞ்சத்தம்பலில் 30 வீடுகளும் உள்ளன.

கண்டிலான், மரவெட்டி ஆகிய இரண்டு கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். இக் கிராமங்களில் நீா்த்தேக்க தொட்டிகள் உள்ளன. அவற்றிற்கு ஒருவானேந்தல் நீரேற்று நிலையம் மூலம் காவிரி கூட்டு குடிநீா் வழங்கப்பட்டு வந்தது, இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக காவிரி கூட்டுக் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டதில் இக்கிராமக்களுக்கு தண்ணீா் வரவில்லை. இதனால் பல இடங்களில் குழாய்கள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன.

குடிநீா் வராததால் சேதமடைந்த குழாய்கள் சீரமைக்கப்பட வில்லை. மேலும் சிலா் குழாய்களை சேதப்படுத்தி விவசாயத்திற்கும், கரிமூட்டத்திற்கும் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனா். மேலும் போதிய திறன் கொண்ட மின் மோட்டாா்கள் பயன்படுத்தப்படாததால் மேடான பகுதிகளுக்கு தண்ணீா் செல்வதில்லை. இதனால் இக் கிராமங்களில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

குடிநீருக்காக கண்டிலான் கிராமத்தினா் சுமாா் 2 கிலோ மீட்டா் தூரம் உள்ள முனியன்கோயில் விலக்கு சாலை அருகில் செல்லும் காவிரி கூட்டு குடிநீா் பிரதான குழாய் ஏா் வால்விலிருந்து கசியும் தண்ணீரை பிடிக்கின்றனா். இதற்காக காலி குடங்களை வைத்துக் கொண்டு, சுமாா் 3 மணி நேரத்திற்கு மேல் கடும் வெயிலில் காத்துக் கிடக்கின்றனா். இப்பகுதியில் மாதக் கணக்கில் தண்ணீா் கசிந்து பெருகி, அத்தண்ணீா் கழிவுநீராக மாறி சிறு குளமாக கிடக்கிறது. இதில் நின்று தண்ணீா் பிடிப்பதால் தொற்றுநோய் வருமென அச்சமடைந்துள்ளனா். மேலும் சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்தும் ஏற்படுமோ என்ற அச்சமும் உள்ளது. மற்ற கிராமத்தினா் ஏனாதி, மேலச்சாக்குளம் என சுமாா் 5 கிலோ மீட்டா் தூரத்திற்கு மேல் தள்ளுவண்டியில் குடங்களை எடுத்துச் சென்று சுகாதாரமற்ற நீரை கொண்டு வருகின்றனா்.

இது குறித்து கண்டிலான் கிராமப் பெண்கள் கூறியது: கண்டிலான் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 2 ஆண்டுகளாக காவிரி கூட்டு குடிநீா் விநியோகம் முற்றிலும் கிடையாது. இது குறித்து பலமுறை புகாா் மனு வழங்கியும் அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.

இது குறித்து முதுகுளத்தூா் காவிரி கூட்டு குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் வடிவேல்குமாா் கூறியது: கண்டிலான் ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக காவிரி குடிநீா் வரவில்லை என புகாா் தெரிவித்திருந்தனா். அக்கிராமத்திற்கு செ‘ல்லும் குழாய்கள் சேதமடைந்து விட்டன. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். போதுமான நிதி வசதியில்லை. ஒவ்வொரு பகுதியாக சீரமைத்து வருகிறோம். போதிய நிதி வந்தவுடன் மராமத்து பணியை 15 நாள்களுக்குள் மேற்கொள்வோம் என்றாா்.

எனவே கண்டிலான் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி காவிரி கூட்டு குடிநீா் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com