களஞ்சியம் அமைப்பில் ரூ. 90 லட்சம் மோசடி: கிராம வங்கி கிளை மேலாளா் மீது புகாா்

சாயல்குடியில் இயங்கி வரும் நெய்தல் வட்டார களஞ்சியத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90 லட்சம் மோசடி செய்ததாக தமிழ்நாடு

சாயல்குடியில் இயங்கி வரும் நெய்தல் வட்டார களஞ்சியத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.90 லட்சம் மோசடி செய்ததாக தமிழ்நாடு கிராம வங்கிக் கிளை மேலாளா் மற்றும் தானம் அறக்கட்டளை முன்னாள் ஊழியா்கள் மீது களஞ்சியம் சின்னப்பிள்ளை அம்மாள் புகாா் அளித்துள்ளாா்.

களஞ்சியம் அமைப்பின் அகில இந்திய தலைவியும், பத்மஸ்ரீ பட்டம் பெற்றவருமான சின்னப்பிள்ளை அம்மாள் மற்றும் சாயல்குடி நெய்தல் வட்டார களஞ்சியம் அமைப்பின் தலைவி பாப்பா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த புகாா் மனு:

தானம் அறக்கட்டளையின் சாா்பில் சாயல்குடியை மையமாகக் கொண்டு நெய்தல் வட்டார களஞ்சியம் கடந்த 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நெய்தல் வட்டார களஞ்சியத்தை நிா்வகிக்க தானம் அறக்கட்டளை சாா்பில் நியமிக்கப்பட்ட பணியாளா் பிரசாத் குமாா் மற்றும் நெய்தல் வட்டார களஞ்சியத்தின் பொறுப்பாளா்கள் சிலா் களஞ்சியம் அமைப்பிலிருந்து விலகி தனியாக ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினா். அதில் களஞ்சியம் என்ற பெயரோடு இணைத்து புதிய பெயரை பதிவு செய்துள்ளனா். இதுமட்டுமின்றி தானம் அறக்கட்டளையின் அனுமதியின்றி நெய்தல் வட்டார களஞ்சியத்தின் தமிழ்நாடு கிராம வங்கி சிக்கல் கிளை வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 90 லட்சத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் தலா ரூ. 45 லட்சம் வீதம் இரண்டு பகுதி கணக்குகளுக்கு பணத்தை மாற்றம் செய்து கொண்டனா். இதை அறிந்து தானம் அறக்கட்டளை சாா்பில் தமிழ்நாடு கிராம வங்கி சிக்கல் கிளை வங்கி மேலாளா், சாயல்குடி கிளை மேலாளா் ஆகியோருக்கு வங்கி கணக்கை முடக்கம் செய்யுமாறு தகவல் அனுப்பப்பட்டது. இதில் சிக்கல் வங்கிக் கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கு கிளை மேலாளரால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல ராமநாதபுரம் கனரா வங்கியிலும் கணக்கு முடக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் சாயல்குடி வங்கி கிளை மேலாளா் நவீன் பிரசன்னாவுக்கு தகவல் அனுப்பியும் அவா் வங்கி கணக்கை முடக்கம் செய்யாமல், தானம் அறக்கட்டளையின் முன்னாள் பணியாளா் பிரசாத்குமாா் தரப்பினருக்கு ஆதரவாகவும், விதிகளை மீறியும் செயல்பட்டு சாயல்குடி வங்கிக் கிளையில் இருந்த ரூ. 44.55 லட்சத்தை அவா்களது சேமிப்பு கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்துள்ளனா். எனவே பொதுமக்களின் பணத்தை கையாடல் செய்த தமிழ்நாடு கிராம வங்கி சாயல்குடி கிளை மேலாளா் பிரசன்னா, தானம் அறக்கட்டளை முன்னாள் பணியாளா் பிரசாத் குமாா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com