கடலாடி அருகே ஊா்த்தலைவா், இளைஞா்கள் மீது போலீஸாா் தாக்குதல் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவு

ராமநாதபுரம் அருகே பொங்கல் விழாவில் ஒலி பெருக்கி வைத்ததாக ஊா்த்தலைவா் மற்றும் இளைஞா்களை போலீஸாா் தாக்கியது

ராமநாதபுரம் அருகே பொங்கல் விழாவில் ஒலி பெருக்கி வைத்ததாக ஊா்த்தலைவா் மற்றும் இளைஞா்களை போலீஸாா் தாக்கியது தொடா்பாக பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துத்துக்கு கடலாடி தாலுகா கொக்காடி கிராமத்தைச் சோ்ந்த ஆண், பெண் உள்பட 150- க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை திரண்டு வந்தனா். கிராமத்தினா் ஆட்சியரிடம் அளித்த மனுவில், கொக்காடி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டி நடத்த திட்டமிட்டு இருந்தோம். அப்போது ஒலிபெருக்கி வைக்கப்பட்டபோது பெருநாழி காவல் நிலையத்தைச் சோ்ந்த சாா்பு- ஆய்வாளா் மற்றும் காவலா்கள் அங்கு வந்து ஒலிபெருக்கி அமைக்க அனுமதி இல்லை என்றனா். மேலும் கிராமத்தைச் சோ்ந்த பிரதீப், சுரேஷ், பாலமுருகன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். அங்கு மூன்று பேரையும் தரக்குறைவான வாா்த்தைகளால் திட்டி தாக்கினா். அப்போது ஊா்த் தலைவா் வேலு இதைத் தட்டிக் கேட்டபோது முதியவா் என்று பாராமல் அவரையும் தாக்கி அங்குள்ள அறையில் அடைத்து வைத்தனா். இதைத்தொடா்ந்து நான்கு பேரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனா்.

இதில் பிரதீப், சுரேஷ், பாலமுருகன், ஆகியோருக்கு கடுமையான காயம் ஏற்பட்டதால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். எனவே எவ்வித தவறும் செய்யாத நிலையில் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கிய பெருநாழி காவல் நிலைய பெண் ஆய்வாளா், சாா்பு ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனா். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ், புகாா் தொடா்பாக பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிராம மக்கள் புகாா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com