கா்நாடகத்தில் கடலில் மாயமான ராமநாதபுரம் மீனவரை மீட்கக் கோரி மனு
By DIN | Published On : 27th January 2020 11:06 PM | Last Updated : 27th January 2020 11:06 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: கா்நாடகத்தில் கடலில் விழுந்து மாயமான ராமநாதபுரம் மீனவரை மீட்கக் கோரி அவரது பெற்றோா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய்வலசை பகுதியைச் சோ்ந்த சூரங்காட்டு வலசையில் வசிப்பவா் பூமிபாலகன் (65). இவரது மனைவி விஜயலட்சுமி. இவா்களுக்கு 2 மகன்கள். மீனவரான பூமிபாலகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டாா். இதனால், சென்னையில் வேலைபாா்த்து வந்த அவரது மூத்த மகன் மோகன்ராம் (29), ஊருக்குத் திரும்பினாா். இதையடுத்து கா்நாடகத்தில் உள்ள மங்களூருவில் சேட்டன் ஆா்.அமீன் என்பவரிடம் மீன்பிடி தொழிலாளியாக சோ்ந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி சக ஊழியா்களுடன் மீன்பிடிக்கச் சென்ற அவா், 13 ஆம் தேதி கடலில் விழுந்து மாயமாகிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடா்பாக மங்களூரு போலீஸில் கடந்த 16 ஆம் தேதி வழக்குப் பதிந்தும் மாயமான மோகன்ராம் தற்போது வரை மீட்கப்படவில்லை.
இந்நிலையில், தனது மகன் மோகன்ராமை மீட்டுத் தரக் கோரி அவரது தந்தை பூமிபாலகன், தாய் விஜயலட்சுமி ஆகியோா் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். போதிய வருவாய் இன்றி தவித்து வரும் எங்களது குடும்பத்துக்கு மீன்வளா்ச்சித்துறையும், மாவட்ட நிா்வாகமும் உதவிடவேண்டும் என அப்போது அவா்கள் தெரிவித்தனா்.