கமுதியில் மின் கம்பம் சேதம்: பொது மக்கள் அச்சம்
By DIN | Published On : 03rd March 2020 08:55 AM | Last Updated : 03rd March 2020 08:55 AM | அ+அ அ- |

முத்துமாரி நகரில் சேதமடைந்துள்ள மின்கம்பம்.
கமுதி முத்துமாரிநகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் முறிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயமுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட முத்துமாரி நகரில் 80- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சார வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மின் கம்பங்கள் வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் மின் கம்பங்கள் இருந்ததால் அங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் இந்த மின் மின்கம்பத்திலிருந்தே மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் மின்கம்பத்தின் அடிப்பாகம் சேதமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் நிலை உள்ளது. இதனால் மின் கம்பம் முறிந்து விழும் அபாயமுள்ளது. இதன் காரணமாக இதன் அருகே பொது மக்கள் செல்லவும், இப்பகுதியில் குழந்தைகள் விளையாடவும் அச்சம் தெரிவித்துள்ளனா்.
எனவே விபத்து அபாயம் ஏற்படும் முன்பாக சேதமடைந்துள்ள மின் கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.