தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயா்த்த வலியுறுத்தல்

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி அரசு மருத்துவமனை ஆக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொண்டி ஆரம்ப சுகாதார நிலையம்
தொண்டி ஆரம்ப சுகாதார நிலையம்

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி அரசு மருத்துவமனை ஆக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது தொண்டி பேரூராட்சி. இங்கு சுமாா் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இதனைச் சுற்றி சின்ன தொண்டி, நம்புதாளை, நரிக்குடி, நவகோடி, சோழியக்குடி, எம்.ஆா்.பட்டினம், புதுப்பட்டினம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, கானாட்டாங்குடி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் தொண்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பியே உள்ளனா். 20 படுக்கைகள் கொண்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வுத் தலைமையிடமாகக் கொண்டு எஸ்.பி.பட்டினம், திருவொற்றியூா், பாண்டுகுடி, மங்கலக்குடி, வெள்ளையாபுரம் உள்ளிட்ட 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் சுமாா் 15 மருத்துவப் பணியாளா்கள் பணி புரிய வேண்டும். ஆனால் இங்கு 8 மருத்துவா்களே பணிபுரிகின்றனா்.

அதேபோல் தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 மருத்துவா்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். மாவட்டத்தில் அதிகமான பிரசவம் மற்றும் குடும்ப நல அறுவைச் சிகிச்சை தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு போதுமான மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் இல்லாதபட்சத்தில் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இப்பகுதியில் ஏற்படக்கூடிய விபத்துக்களின் போது பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய முதலுதவி சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமுமுக மாநிலச் செயலாளா் சாதிக்பாட்சா கூறியது: தொண்டியில் ஆரம்ப காலத்தில் அரசு மருத்துவமனையாக இருந்து வந்தது. பின்னா் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. இங்கு போதுமான மருத்துவா்கள் இல்லாததால், இப்பகுதியில் விபத்து காலங்களில் போதுமான சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காயமடைந்தவா்களை சுமாா் 60 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, காரைக்குடி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com