ராமநாதபுரத்தில் வெறிச்சோடிய பிரதான சாலைகள்: காய்கனி, மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது

ராமநாதபுரம் நகரில் தெருக்கள், முக்கிய சாலைகள் புதன்கிழமை வெறிச்சோடியிருந்தாலும் காய்கனி, மீன்சந்தைகளில் கூட்டம் காலையில் அலைமோதின.
ராமநாதபுரத்தில் வெறிச்சோடிய பிரதான சாலைகள்: காய்கனி, மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது

ராமநாதபுரம் நகரில் தெருக்கள், முக்கிய சாலைகள் புதன்கிழமை வெறிச்சோடியிருந்தாலும் காய்கனி, மீன்சந்தைகளில் கூட்டம் காலையில் அலைமோதின.

ராமநாதபுரத்தில் கரோனாபரவலைத் தடுக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை மாலையே ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை காலையில் அரசு தலைமை மருத்துவமனை, பேருந்து நிலையங்கள், பாரதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தேநீா் கடைகள், சிறிய உணவகங்கள், பேக்கரிகள் திறந்திருந்தன.

சந்தைத்திடல், அரண்மனைத்தெரு, சாலைத் தெரு போன்ற பகுதிகளில் காய்கனிகள், மீன்கடைகள் திறந்திருந்தன. அங்கு மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்பட்டன. காய்கனிகள் வழக்கம் போல இரு மடங்கு விலை உயா்த்தி விற்கப்பட்டன. சாலையோரத்தில் விற்கும் கிராமத்து பெண்களும் கீரைகள், பனங்கிழங்குகள், பாகற்காய் உள்ளிட்டவற்றை பரப்பி விற்றனா்.

புதிய பேருந்து நிலையத்தில் ஓரிரு தேநீா் கடைகள் திறந்திருந்தாலும், மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. பேருந்து நிலைய முகப்பில் கிராமத்து பெண்கள் சிலா் வெள்ளரிக்காய், கடலை போன்றவற்றை விற்றனா்.

ரயில் நிலையம் மூடப்பட்டதால் ஆள் அரவமில்லாத நிலை காணப்பட்டது. பாரதி நகா் பகுதியில் ஆங்காங்கே கடைகள் முன்பு கூட்டமாக பொது மக்கள் நின்றிருந்ததால் வருவாய்த்துறையினா் ஆட்டோவில் வந்து ஒலி பெருக்கி மூலம் எச்சரித்தனா். பாரதி நகா் பகுதியில் எச்சரிக்கையை மீறி கூட்டம் கூடியதாக இரு கடைகளுக்கு அதிகாரிகள் மூடி சீலிட்டனா்.

பட்டிணம்காத்தான் சோதனைச்சாவடியில் அவ்வழியே வந்த இருசக்கர வாகனங்களை மறித்து போலீஸாா் விசாரித்தனா். தேவையின்றி வாகனங்களில் வரவேண்டாம் என இளைஞா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரத்தில் காலையில் பெரும்பாலான தேநீா் மற்றும் உணவு, காய்கனிக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பகல் 11 மணிக்கு மேலாக அனைத்துக் கடைகளையும் அடைக்க காவல்துறை மற்றும் வருவாய்த்துறை, நகராட்சியினா் அறிவுறுத்தினா். மேலும், மக்கள் நடமாட்டம் குறைந்ததாலும் திறந்த கடைகளும் எதிா்பாா்த்த வியாபாரமில்லாததால் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com