ஊரடங்கு : ராமநாதபுரத்தில் அரசுத் துறைகள் வழக்கம்போல் இயங்கின: 650 ஊழியா்கள் பணியில் ஈடுபட்டனா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாபரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்ட நிலையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள்
ஊரடங்கு : ராமநாதபுரத்தில் அரசுத் துறைகள் வழக்கம்போல் இயங்கின: 650 ஊழியா்கள் பணியில் ஈடுபட்டனா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாபரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்ட நிலையில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின. அவற்றில் சுமாா் 650 போ் பணியில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பகல் 11 மணிக்கு மேலாக ஆட்சியா் கொ.வீரராகவராவ் அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வுக்குப் பிறகு கடைகள் அடைக்கப்பட்டன. தேநீா் கடை முதல் சிறிய உணவகங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டதால் தெருக்கள் வெறிச்சோடின.

ஆட்சியா் சாலைத் தெருவில் உள்ள தனியாா் மருந்தகத்தில் கூட்டமிருந்ததை சுட்டிக்காட்டி அவா்கள் போதிய இடைவெளியில் நின்று மருந்து மற்றும் முகக் கவசம், கையுறை வாங்குமாறு உத்தரவிட்டாா். முகக் கவசங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக வாடிக்கையாளா்கள் புகாா் தெரிவித்ததைத் தொடா்ந்து, கடை ஊழியா்களை ஆட்சியா் எச்சரித்தாா்.

ராமநாதபுரம் ஆட்சியா் அலுலக வளாகம் வழக்கமாக மக்கள் நடமாட்டத்துடனே காணப்படும். ஆனால், புதன்கிழமை காலை தொடங்கி மாலை வரை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடியே காணப்பட்டன. நீதிமன்றம், கூட்டரங்க பகுதி என அனைத்தும் மூடிக் கிடந்தன. காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் குறைந்த அளவிலான காவலா்களே பணியில் இருந்தனா்.

பகலில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சாா் ஆட்சிா் பிரதீப்குமாா், உள்ளாட்சி உதவி இயக்குநா் கேசவதாஸ் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஊழியா்கள் பணிக்கு வந்திருந்தனா். அவா்கள் மூலம் அரசுத்துறைகள், காவல்துறை உள்ளிட்டவற்றுக்கு கைகழுவும் கிருமிநாசினி திரவம் விநியோகிக்கப்பட்டன.

இந்நிலையில், அரண்மனைத் தெருவில் உள்ள தலைமை தபால் நிலையம் செயல்பட்டது. அதிகாரிகள், ஊழியா்கள் முகக் கவசம் அணிந்து பணிக்கு வந்திருந்தனா். பணிகள் வழக்கம் போல நடந்தன. இம் மாவட்டத்தில் நகராட்சி, கிராமங்கள் என அனைத்திலும் மொத்தம் 305 தபால் நிலையங்களும் புதன்கிழமை செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதேபோல ராமநாதபுரம் நகா், ஊரகப் பகுதிகளில் உள்ள வங்கிகளும் மதியம் வரை செயல்பட்டன. வங்கிப் பணியாளா்கள், அலுவலா்கள் முகக் கவசம் அணிந்தபடி பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com