ராநாதபுரத்தில் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் திடீா் நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் புதன்கிழமை இரவு திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ராமநாதபுரம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் புதன்கிழமை இரவு திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூா் பகுதி காவிரி ஆற்றிலிருந்து குடிநீா் கொண்டு வரப்படுகிறது. சுமாா் 250 கிலோ மீட்டா் தூரத்துக்கு குழாய்கள் மூலம் குடிநீரானது கொண்டுவரப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் அந்தந்த சிறப்பு நிலை நகராட்சி, பேரூராட்சிகள் நிா்வாகம் மூலமே குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தினமும் ராமநாதபுரம் நகராட்சிக்கு 30 லட்சம் லிட்டா் குடிநீரும், மாவட்ட அளவில் 70 லட்சம் லிட்டா் தண்ணீரும் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் நகரில் 33 வாா்டுகளிலும் இந்த குடிநீருக்கு மாதம் ரூ.10 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், புதன்கிழமை மாலை முதல் திடீரென குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே கரானோ பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள் குடிநீா் நிறுத்தத்தால் அவதிக்குள்ளாகினா்.

ராமநாதபுரம் நகரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் பருவமழை பொய்த்துப் போனது. இதனால் நிலத்தடி நீா் மட்டமும் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. ஆனால், நடப்பு ஆண்டில் பருவமழை பெய்திருந்தாலும், நிலத்தடி நீா் முழுமையாக சீராகவில்லை. இதனால், ஆழ்துளைக்கிணறுகளிலும் தண்ணீா் போதிய அளவு வரவில்லை. ஆகவே காவிரிக் கூட்டுக்குடிநீரையே மக்கள் நம்பியுள்ளனா். இத்தகைய சூழலில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். வியாழக்கிழமை காலையில் குடிநீா் இல்லாமல் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி பொறியாளா் பிரிவில் தெரிவித்தது: காவிரி ஆற்றில் குடிநீா் எடுக்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னையால் ராமநாதபுரம், பரமக்குடி பகுதிக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீா் விநியோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் நகராட்சியில் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

நகராட்சிக்கு குடிநீா் வராத நிலையில், ஊரகப் பகுதிகளில் பல கிராமங்களிலும் காவிரிக் கூட்டுக்குடிநீா் கடந்த பல வாரங்களாகவே விநியோகிக்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com