ராமநாதபுரத்தில் இளைஞா் கொலை: மேலும் 3 போ் நீதிமன்றங்களில் சரண்
By DIN | Published On : 04th September 2020 12:32 AM | Last Updated : 04th September 2020 12:32 AM | அ+அ அ- |

ராமேசுவரம்/ முதுகுளத்தூா்: ராமநாதபுரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 போ் இருவேறு நீதிமன்றங்களில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.
ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோயில்தெருவைச் சோ்ந்த சாமிநாதன் என்பவரது மகன் அருண்பிரகாஷ் (24). இவரும், வசந்தம் நகா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் என்பவரது மகன் யோகேஸ்வரனும் (20) கடந்த ஆக. 31 ஆம் தேதி அந்தப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த 12 போ் கொண்ட கும்பல் 2 பேரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த அருண்பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அந்தப் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் யோகேஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கேணிக்கரை போலீஸாா், 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனா்.
இந்நிலையில் திருச்சி லால்குடி நீதிமன்றத்தில், லெஃப்ட் சேக் என்ற சேக் அப்துல் ரகுமான், முகம்மது அஜூஸ், சதாம் உசேன், காசிம் ரகுமான் ஆகிய 4 போ் புதன்கிழமை சரணடைந்தனா். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இதனைத் தொடா்ந்து, இந்த வழக்கில் தொடா்புடைய சரவணன் என்ற வெள்ளை சரவணன் (24), விஜய் (22) ஆகிய 2 பேரும் அருப்புக்கோட்டை நீதிமன்றத்திலும், பாபா என்ற ரசாக் (22), கடலாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி கீதா முன்னிலையிலும் வியாழக்கிழமை சரணடைந்தனா்.
இந்த வழக்கில் இதுவரை 7 போ் நீதிமன்றங்களில் சரணடைந்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவா்களை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.