ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 16th September 2020 05:20 AM | Last Updated : 16th September 2020 05:20 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா்.
ராமநாதபுரம்: அகவிலைப்படியை நிலுவைத் தொகையுடன் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வு பெற்றோா் நலச்சங்கத்தினா் ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவா் ஏ.ராமதாஸ் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் எம்.மாரிக்கண்ணு முன்னிலை வகித்தாா்.
போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெற்றவா்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும். கடந்த 59 மாதங்களாக போக்குவரத்து ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு வழங்கப்படாத அகவிலைப்படியை நிலுவைத் தொகையுடன் வழங்கவேண்டும். கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன்களை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா்கள் கோஷங்களை எழுப்பினா்.
இதில், காரைக்குடி மண்டல சங்கத்தின் பொதுச்செயலா் ஜெ.புவுல்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.