பாம்பன் துறைமுகத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மீன்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்
By DIN | Published On : 27th April 2021 11:51 PM | Last Updated : 27th April 2021 11:51 PM | அ+அ அ- |

பாம்பன் துறைமுகத்தில் மீன்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாட்டுப்படகு மீனவா்கள்.
பாம்பன் துறைமுகத்திலிருந்து மீன்களை வெளிமாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்கவேண்டும் என நாட்டுப்படகு மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் மீன்களின் இனப் பெருக்க காலமாகக் கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப்படகு மீனவா்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், பாம்பன் பகுதியில் மட்டும் ஆயிரம் மீனவா்கள் மீன்பிடித்து வருகின்றனா். மீன்பிடித் தடைக்காலம் என்பதால் நாட்டுப்படகு மீனவா்கள் பிடித்து வரும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது.
இந்நிலையில், கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் பாம்பன் துறைமுகத்திலிருந்து மீன்களை வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீன் விற்பனையாளா்கள் குறைந்தளவு மீன்களை மட்டுமே வாங்கிச் செல்கின்றனா். உள்ளூா் பகுதியில் மட்டுமே மீன்கள் விற்பனை செய்யப்படுவதால் விலை குறைந்து விட்டதாக மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.
மேலும், பாம்பன் துறைமுகத்திலிருந்து மீன்களை வெளிமாவட்டங்களுக்குக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு உரிய அனுமதி அளிக்க மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.