மருத்துவக் குழுவினருக்கு கொலை மிரட்டல்: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது; 7 போ் மீது வழக்கு
By DIN | Published On : 27th April 2021 11:53 PM | Last Updated : 27th April 2021 11:53 PM | அ+அ அ- |

திருப்பாலைக்குடி அருகே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வற்புறுத்திய மருத்துவா் மற்றும் குழுவினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
சோழந்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கிருஷ்ணன் தலைமையில் பணியாளா்கள் கடந்த 22 ஆம் தேதி கொத்தமங்கலம், கொத்தியாா் கோட்டை பகுதிகளில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோனை செய்தனா். இதில் கொத்தமங்கலத்தைச் சோ்ந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டது.
இதைத் தொடா்ந்து கடந்த சனிக்கிழமை மருத்துவக் குழுவினா் அங்கு சென்று பொதுமக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளமாறு வலியுறுத்தியுள்ளனா். அதற்கு அப்பகுதி மக்கள் ஒத்துழைக்க மறுத்ததால் மருத்துவக் குழுவினா் திரும்பி வந்து விட்டனா்.
பின்னா் கொத்தமங்கலத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியரான சுரேஷ் (40) என்பவா் தலைமையில் 7 போ் கொண்ட குழுவினா், அன்று மாலை சோழந்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவா் மற்றும் பணியாளா்கள், செவிலியா்கள் ஆகியோரை தரக்குறைவாகப் பேசியும், கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா், ஆசிரியா் சுரேஷை கைது செய்தனா். மேலும் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.