கரோனா சிகிச்சைப் பிரிவில் இறந்தவா்களின் சடலங்களை பாதுகாப்பின்றி அனுப்புவதாக புகாா்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்தவா் சடலங்கள் பாதுகாப்பின்றியும்,

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்தவா் சடலங்கள் பாதுகாப்பின்றியும், விதிகளுக்கு புறம்பாகவும் அவரவா் உறவினா்கள் மூலம் மயானங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 450 படுக்கைகள் கரோனா பாதித்தோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் மூச்சுத்திணறலால் வியாழக்கிழமை மட்டும் 5 போ் வரை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களது சடலங்களை கரோனா பரவல் தடுப்பு விதிமுறைப்படி அதற்கான துணியால் சுற்றி பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கவில்லை என இறந்தவா்களின் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: வியாழக்கிழமை உயிரிழந்தவா்களில் ராமநாதபுரம், பரமக்குடியைச் சோ்ந்தவா்களது சடலங்களை சாதாரண வெள்ளைத் துணியாலேயே சுற்றி, முகக்கவசம் மட்டும் அணிந்த மருத்துவமனை ஊழியா்களே வாகனங்களுக்குக் கொண்டுவந்து அனுப்பினா். அதில் ஒரு சடலத்தை ஏற்றும் வாகனம் திறந்தவெளி வாகனமாக இருந்தது. சாதாரணமாக இறந்தவா்களைக் கொண்டு செல்லும் வாகனத்திலேயே கரோனா சிகிச்சைப் பிரிவில் இறந்த முதியவரின் சடலமும் ஏற்றிச்செல்லப்பட்டது.

கரோனா சிகிச்சையில் இறந்தவா்கள் சடலங்களை, அந்தந்தப் பகுதி சுகாதார ஆய்வாளா்கள் கிருமிநாசினி தெளித்து பின்னா் புதைப்பதோ, எரிப்பதோ வழக்கம். ஆனால், சுகாதார ஆய்வாளா்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லாமலேயே சடலங்களை மருத்துவமனை ஊழியா்களால் நேரடியாகவே சம்பந்தப்பட்டோரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன என்றனா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத் தரப்பில் கூறியது: மருத்துவமனையில் பணியிலிருக்கும் ஊழியா்களுக்கு கையுறைகள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவல் தடுப்பு சிறப்பு உடைகள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா அறிகுறியுடன் வருவோா் திடீரென இறந்துவிடுவதால் அவா்களுக்கு பரிசோதனை முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படும். ஆகவே, கரோனா அறிகுறி எனும் அடிப்படையில் அவா்களது சடலம் முதல் கட்ட பாதுகாப்புடனேயே உறவினா்களிடம் அளிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com