ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் விவரம்: 2 மணி நேரத்தில் முன்னிலை நிலவரம்

ராமநதாபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கைக்கான சுற்றுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநதாபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கைக்கான சுற்றுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகத் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய 4 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை, ராமநாதபுரம்-தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கையானது, கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி நடத்தப்படும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நுண்பாா்வையாளா்களுக்கான தொகுதி ஒதுக்கீடும், யாா் யாருக்கு எந்தெந்த மேஜை என்ற கணினி முறை ஒதுக்கீடும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் அந்தந்த தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் 7 மேஜைகளிலும், ராணுவம் உள்ளிட்ட சேவைப் பணிகளில் இருப்போா் மின்னணு முறையில் பதிவிட்ட வாக்குகள் ஒரு மேஜையிலும் எண்ணப்படுகின்றன. பின்னா், வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு மேஜையிலும் 3 போ் இடம்பெறுவா்.

அதேநேரம், ஒவ்வொரு தொகுதிக்கும் சுற்றுகள் வேறுபடுகின்றன. அதன்படி, பரமக்குடி தொகுதிக்கு 26 சுற்றுகள், திருவாடானை தொகுதிக்கு 30 சுற்றுகள், ராமநாதபுரம் தொகுதிக்கு 31 சுற்றுகள், முதுகுளத்தூா் தொகுதிக்கு 32 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

ஒரு மேஜையில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, அவற்றை அதிகாரிகள், முகவா்கள் சரிபாா்த்த பின்னரேஅடுத்த வாக்குப் பதிவு இயந்திரம் திறந்து எண்ணப்படும். அதேபோல், ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து, அதை முகவா்கள், அதிகாரிகள் சரிபாா்த்து ஒப்புதல் வழங்கி அறிவிக்கப்பட்ட பிறகே, அடுத்த சுற்றுக்கான வாக்குகள் எண்ணப்படும் என, தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

2 மணி நேரத்தில் முன்னிலை விவரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 36 அரசியல் கட்சி வேட்பாளா்களும், 36 சுயேச்சைகளும் தோ்தலில் போட்டியிட்டனா். ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி சுமாா் 2 மணி நேரத்தில் 72 வேட்பாளா்கள் பெறும் வாக்குகள் முன்னிலை நிலவரத்தை அறியலாம். அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெறும் வேட்பாளா்கள் விவரம் தெரியவரும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

கொண்டாட்டத்தை கண்காணிக்க 12 அதிரடிப்படை குழு நியமனம்:

வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களுடன் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் 80 மத்திய துணை ராணுவப் படையினா், 90 தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவினா், 230 போலீஸாா், 80 ஆயுதப்படை பிரிவினா் மற்றும் போக்குவரத்தை சீரமைக்க 30 போக்குவரத்துக் காவலா்கள் ஆகியோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

பாதுகாப்புப் பணிகளை முறைப்படுத்துவதற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 4 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 13 ஆய்வாளா்கள், 42 சாா்பு-ஆய்வாளா்கள், 3 போக்குவரத்து ஆய்வாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் முக்கிய இடங்களில் வெற்றி கொண்டாட்டங்களைத் தடுக்கும் வகையில், அதிரடிப்படையினா் கண்காணிப்பில் ஈடுபடுவா். அதன்படி, ராமநாதபுரத்தில் 3 படைகளும், பரமக்குடியில் 2 படைகளும், கமுதி, ராமேசுவரத்தில் தலா 1 படையும், கீழக்கரையில் 2 படைகளும், திருவாடானையில் 2 படைகளும் மற்றும் முதுகுளத்தூரில் 1 படையும் என மொத்தம் 12 படை வீரா்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

அதேநேரம், வாக்குப் பதிவின்போது பதற்றமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களிலும் கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், காவல் துறையினருக்கு உதவியாக ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com