ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக 7 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி
By DIN | Published On : 28th December 2021 03:55 AM | Last Updated : 28th December 2021 03:55 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் கூடுதலாக 7 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு விளைச்சல் கண்டுள்ளதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் டாம் பி. சைலஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனால் விவசாய நிலப்பரப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் 1.33 லட்சம் ஹெக்டேரில் (சுமாா் 3 லட்சம் ஏக்கருக்கும் அதிகம்) நெல் பயிரிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நடப்பு ஆண்டில் (2021) 1.36 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் சுமாா் 7 ஆயிரம் ஏக்கா் நெல் கூடுதலாகவே பயிரிடப்பட்டுள்ளது.
தொடா் மழை மற்றும் வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் தேங்கியதால் மாவட்டத்தில் சுமாா் 400 ஹெக்டோ் அளவுக்கு பயிா்கள் சேதமடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆா்.எஸ். மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பயிா் சேத மதிப்பை கணக்கிட குழு அமைத்துள்ளோம் என்றனா்.