மாா்ச் முதல் மதுரை - ராமேசுவரம் இரு மாா்க்கத்தில் பயணிகள் ரயில் இயக்கம்அதிகாரிகள் தகவல்
By DIN | Published On : 06th February 2021 09:29 PM | Last Updated : 06th February 2021 09:29 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு மாா்ச் மாதம் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக, ராமநாதபுரம் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் இரு மாா்க்கத்தில் இயக்கப்பட்டு வந்தது. மதுரையிலிருந்து பயணிகள் ரயில் தினமும் காலை 5.25 மணிக்கு ராமேசுவரம் நோக்கி புறப்படும். அதேநேரத்தில் ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டுச் செல்லும்.
இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 2020 ஏப்ரல் முதல் பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கும், திருச்சிக்கும் மட்டுமே தினமும் இரு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே, ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கவேண்டும் என, வா்த்தக சங்கங்கள் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து ராமநாதபுரம் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் தெரிவித்தது: மாா்ச் முதல் ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு தினமும் காலை 5.30 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல், மாலையில் மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.
இதற்காக, தண்டவாளம் கண்காணிப்பு, ஊழியா்கள் வருகையை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.