இலங்கைக்கு கடத்தவிருந்த 750 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 09th January 2021 09:52 PM | Last Updated : 09th January 2021 09:52 PM | அ+அ அ- |

தனுஷ்கோடி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 கிலோ மஞ்சள் மூட்டைகளை வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்த இந்திய கடலோரக் காவல்படையினா்.
ராமேசுவரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்துள்ள மூன்றாம் மணல் தீடையில் 15 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750 கிலோ மஞ்சளை இந்திய கடலோரக்காவல்படையினா் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல்படையினா் ஹோவா் கிராப்ட் கப்பலில் பாக்நீரிணை மற்றும் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தனுஷ்கோடியை அடுத்துள்ள மூன்றாம் மணல் தீடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகளை சோதனையிட்டனா். அங்கு 15 மூட்டைகளில் 750 கிலோ மஞ்சள் இருந்தது தெரியவந்தது.
இந்த மஞ்சள் மூட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக மா்மநபா்கள்
இங்கு கொண்டு வந்து மறைத்து வைத்துள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மஞ்சள் மூட்டைகளை கைப்பற்றி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரகாவல்படை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். இந்த கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு அந்நாடு தடைவிதித்துள்ள நிலையில், தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாக சமீப காலமாக மஞ்சள் கடத்தல் அதிகரித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் இலங்கைக்கு கடத்த முயன்ற 8 ஆயிரம் கிலோ மஞ்சள் மூட்டைகளை கடலோரக் காவல் படையினா் பறிமுதல் செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.