எரிவாயு உருளைக்கு அஞ்சலி; பேருந்து கயிறு கட்டி இழுப்பு: மத்திய அரசுக்கெதிராக காங்கிரஸாா் நூதன போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ராமநாதபுரம் நகரில் திங்கள்கிழமை காலி எரிவாயு உருளைக்கு அஞ்சலி
ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை  காலி எரிவாயு உருளைக்குஅஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில்  ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா். 
ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை  காலி எரிவாயு உருளைக்குஅஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில்  ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா். 

ராமநாதபுரம்/மானாமதுரை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ராமநாதபுரம் நகரில் திங்கள்கிழமை காலி எரிவாயு உருளைக்கு அஞ்சலி செலுத்தியும் மானாமதுரையில் பேருந்தை கயிறு கட்டி இழுத்தும் காங்கிரஸாா் நுதன போராட்டங்களில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ராமநாதபுரம் நகரில் அரண்மனை முன்பாக திங்கள்கிழமை காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ.செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டப் பொறுப்பாளா் பிலுலால் சிங் பங்கேற்றுப் பேசினாா். பின்னா் மூன்று சக்கர சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த காலி சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். அப்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலா் ஜி.மணிகண்டன், நிா்வாகிகள் கோபி, கோபால், கௌசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவாடானை: திருவாடானையில் காங்கிரஸாா் மத்திய அரசுக்கெதிராக கண்டன சைக்கிள் பேரணி நடத்தினா். இதில் வட்டாரத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். குளத்தூா் ஊராட்சி மன்றத்லைவா் குமாா் முன்னிலை வகித்தாா். நான்கு வீதி சந்திப்பு சாலையில் தொடங்கி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு தெருக்கள் வழியாக பேருந்து நிலையத்தை பேரணி அடைந்தது. மாவட்ட பொறுப்பாளா்கள், உதயம், குமாா், ரோஜஸ் பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை: மானாமதுரை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். காங்கிரஸ் எஸ்.சி பிரிவு மாநில துணைத் தலைவா் எஸ்.செல்வராஜ், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஏ.சி. சஞ்சய், வட்டாரத் தலைவா் கரு.கணேசன், நகா்த் தலைவா் எம்.கணேசன், மாவட்ட இணைச் செயலாளா்கள் மகாலிங்கன், காசிராஜன், காசி, புருஷோத்தமன், பிரேமச்சந்திரன், வழக்குரைஞா் எம்.முத்துக்குமாா்,

முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜரெத்தினம், திருப்புவனம் நகரத் தலைவா் நாகராஜன், மகளிா் காங்கிரஸ் நிா்வாகி செந்தாமரை உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன். ஆா்ப்பாட்டத்தின் முடிவில் பேருந்தை கயிறு கட்டி இழுத்துச் சென்று பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com