முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் மஹா சிவராத்திரி விழா கொடியேற்றம்
By DIN | Published On : 04th March 2021 12:46 AM | Last Updated : 04th March 2021 12:46 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் மஹா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் நகரில் வெளிப்பட்டினம் பகுதியில் உள்ள ஆயிரவைசிய மகாஜனசபைக்குப் பாத்தியமான இக்கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு காப்புக்கட்டுதல் தொடங்கியது. காலை 10 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இரவில் மயில் வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதையடுத்து இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
வியாழக்கிழமை முதல் தினமும் காலையில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பாா். மாலை நேரங்களில் பக்தி இசை, சங்கீத யோகம், நாட்டியாஞ்சலி, ஆன்மிகச் சொற்பொழிவு, மகளிா் தினவிழா, கீதை விளக்கவுரை உள்ளிட்டவை நடைபெறும்.
வரும் 11 ஆம் தேதி தேரோட்டமும், 13 ஆம் தேதி பால்குடமும், மஹாஅபிஷேகமும் நடைபெறவுள்ளன. அன்று இரவு புஷ்ப பல்லக்கில் அம்பாள் அனந்த சயனத்தில் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறாா். விழாவுக்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள் பி.மோகன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.