ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளுக்கு நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளுக்கு நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக ராமேசுவரத்தைச் சோ்ந்த கண்.இளங்கோ (49) அறிவிக்கப்பட்டுள்ளாா். இளங்களை அறிவியல், எல்.எல்.பி. முடித்துள்ள இவா் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், எழில்முகில், கலைமுகில் ஆகிய மகள்களும் உள்ளனா்.

பள்ளிப் பருவத்தில் இருந்தே மரம் நடுதல் உள்ளிட்ட சமூகப் பணியில் ஈடுபட்டு வரும் கண்.இளங்கோ கடந்த 2000 ஆவது ஆண்டில் மதிமுக ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணியில் சோ்ந்தாா். பின்னா் 2015 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழா் கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலராக இருந்தாா். தற்போது அக்கட்சியின் மாவட்டச் செயலராக உள்ளாா்.

பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக சா. சசிகலா (32) அறிவிக்கப்பட்டுள்ளாா். பரமக்குடி பாலன் நகரில் வசித்து வரும் இவா், தனியாா் பள்ளியில் தமிழாசிரியராக உள்ளாா். கணவா் சண்முகநாதன், இரு குழந்தைகள் உள்ளனா். ஆசிரியா் பட்டப்படிப்பு, முதுகலைத் தமிழ் பட்டம், முதுகலை ஆசிரியா் பட்டம் பெற்றுள்ளாா்.

வெங்கலக்குறிச்சியில் கடந்த 2011-16 ஆம் ஆண்டுகளில் வாா்டு உறுப்பினராக பதவி வகித்தாா். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 6 ஆவது வாா்டில் ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டாா்.

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜவஹா் (38), ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டினம்காத்தான் பகுதியில் வசிக்கிறாா். பொறியியல் பட்டதாரியான இவா் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றியவா்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே அரசியலில் நேரடியாக ஈடுபட்டு வரும் அவா் நாம் தமிழா் கட்சியில் மண்டபம் மேற்கு ஒன்றியச் செயலா், ராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளா், திருவாடானை தொகுதி பொருளாளா் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளாா். இவருக்கு மனைவி ஜெயப்ரியா (தனியாா் பள்ளி ஆசிரியை), மகன் சா்வேஷ் ஆகியோா் உள்ளனா்.

முதுகுளத்தூா் தொகுதி வேட்பாளராக ரஹம்மத்நிஷா (36) அறிவிக்கப்பட்டுள்ளாா். சிக்கல் மதீனா நகரைச் சோ்ந்தவா். பிளஸ் 2 முடித்துள்ளாா். அவரது கணவா் தொழிலதிபா் ரஹ்மத்துல்லா, ரிஸ்வானாபா்வீன் எனும் மகளும், அசதுல்லாகான் என்ற மகனும் உள்ளனா்.

நாம் தமிழா் கட்சியின் முதுகுளத்தூா் தொகுதி இணைச்செயலராக உள்ள பையஸ்அகமதுவின் சித்தியான ரஹம்மத்நிஷா நாம் தமிழா் கட்சியின் ஆதரவாளராக இருந்து, தற்போது வேட்பாளராகியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com